தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு; உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் வீட்டில் போலீஸ் திடீர் சோதனை - சிலிண்டர் வெடித்த சம்பவம்

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில், உயிரிழந்த ஜமேசா முபினின் நெருங்கிய உறவினர் வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் வீட்டில் போலீஸ் திடீர் சோதனை
உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் வீட்டில் போலீஸ் திடீர் சோதனை

By

Published : Oct 26, 2022, 4:18 PM IST

கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக, கடந்த 23ஆம் தேதி ஞாயிறு அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச்சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் வீட்டில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

முன்னதாக காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும், காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியைச்சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும்கூறி 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். மேலும் ஜமேஷாவிற்கு உதவியதாக உக்கடம் பகுதியைச்சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி, 5 பேர் மீதும் உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை டிஜஜி வந்தனா மற்றும் எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். பந்தயசாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் காவல் துறை அலுவலர்களிடம் இந்த வழக்குத்தொடர்பான விவரங்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கேட்டறிந்தனர்.

இதனிடையே கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்செண்ட் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். ஜமேசா முபினின் நெருங்கிய உறவினரான அப்சர்கான் (28) என்பரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தச்சோதனையில் வீட்டில் இருந்த லேப்டாப் ஒன்றைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜமேசா முபினின் நெருங்கிய உறவினரான அப்சர்கானின் மாமனார் அளித்த பேட்டி

இதுகுறித்து அப்சர்கானின் மாமனார் பஷீர் கூறுகையில், ”கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்தனர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் விசாரணைக்காக அழைத்த நிலையில் தன்னை மட்டும் காவல் துறையினர் விடுவித்துவிட்டு, மருமகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்ற விவரம் ஏதும் தெரியாத நிலையில் காவல்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். ஜமேசாவின் நெருங்கிய உறவினர் என்பதால் இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details