கோயம்புத்தூர் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு இன்று (அக் 23) அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. அப்போது காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை அலுவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இரண்டு சிலிண்டர்கள் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியது தெரிய வந்துள்ளது.
கோவையில் கார் இரண்டாக உடைந்து சிதறி விபத்துக்குள்ளானது காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால், அந்த முகவரி குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பத்தை அடுத்து கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், இச்சம்பவம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நடந்திருப்பதால், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளார்.
இதையும் படிங்க:மாங்காடு அருகே கோர விபத்து அண்ணன், தம்பி உட்பட 3 பேர் உயிரிழப்பு