கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது;
'கோவை கரோனா வைரஸ் இல்லாத மண்டலமாக மாறி உள்ள நிலையில், அதற்கு வழிகாட்டிய முதலமைச்சருக்கும், மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்கள் அணிந்து வரவேண்டும். கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்த 26 கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து 23 பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூன்று பகுதிகள் இன்னும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்கப்பட உள்ளன.