தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசவம் குறித்து பெண்களுக்குப் புரிதல் இருக்கிறதா? எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் விளக்கம் - வடமாநில கர்ப்பிணி பெண்

பெண்களின் உடல் குறித்து பெண்கள் முழுமையாக அறிவது மிக அவசியம் என எழுத்தாளர் சந்திரகுமார் விளக்குகிறார்.

auto-chandra-kumar
auto-chandra-kumar

By

Published : Apr 18, 2020, 9:02 PM IST

Updated : Apr 19, 2020, 9:36 AM IST

பிரதிபலன் எதிர்பாராமல் விளிம்புநிலை மக்களுக்கு உதவும் பணியில் தன்னை முழுவதுமாக அர்பணித்துள்ளார் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஆட்டோ சந்திரன் (எ) சந்திரகுமார். எப்போதும்போல மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு அழைப்புவந்தது.

அந்த அழைப்பில், பிரசவ வலியால் வேதனைப்பட்ட ஒடிசா மாநில பெண் குறித்து கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்தார். சாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து அப்பெண்ணிற்குப் பிரசவம் பார்த்து விலைமதிப்பில்லா அந்தப் பிஞ்சு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

இது குறித்து, வெளியான காணொலிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், உண்மையில் அங்கு என்ன நடந்தது? பெண்களே தயக்கம் காட்டும் வேளையில், கொஞ்சமும் அச்சமின்றி எப்படி அவர் பிரசவம் பார்த்தார் என்பது குறித்து எழுத்தாளர் சந்திரகுமாரிடமே பேசினோம்.

"கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் ஆம்புலன்ஸ் சேவை பரவலாகயிருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் ஆட்டோவில்தான் அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்வோம். 35 ஆண்டாக ஆட்டோ ஓட்டிவருவதால், நிறைய பிரசவ சவாரிகளை ஏற்றிச் சென்றிருக்கிறேன். அதிலிருந்து பிரவத்தின் தொடக்க நிலை, அந்தப் பெண்ணின் வேதனை போன்றவற்றை அறிய முடிந்தது.

இதுபோன்ற சூழல்களைக் கையாளும் மனோதிடம், அதிலிருந்துதான் கிடைத்திருக்கிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைப் பார்த்தே எப்போது பிரசவமாகும் எனக் கூறிவிடுவேன்" என அனுபவச் செறிவுடன் பேசுகிறார், எழுத்தாளர் சந்திரன்.

சாலையோரத்தில் பிரசவிக்கும் நிகழ்வைப் பார்ப்பது இது முதல் முறையல்ல எனக் கூறும், எழுத்தாளர் சந்திரன் அவர் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை விவரிக்கிறார்.

auto-chandra-kumar

"முதல் சம்பவம் எனது 8 வயதிலிருந்து பத்து வயதுக்குள் நடந்திருக்கலாம். என் அம்மா, எனது பெரியம்மாவுடன் நான் டவுனுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலியெடுத்தது. அருகிலிருந்த பெண்ணிடம் துணியை வாங்கி பேருந்தினுள் சுற்றிக் கட்டி என் அம்மாவும், பெரியம்மாவும்தான், பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியாமலேயே, நான் அவர்களோடு காத்திருந்தேன்.

கொஞ்ச நேரத்திலேயே, கையில் குழந்தையோடு என் பெரியம்மா இறங்கிவருகிறார். அந்தக் காட்சி இன்றுவரை மனதில் பசுமையாயிருக்கிறது. இன்னொரு சம்பவம், தொண்ணூறுகளில் கோவை ரேஸ் கோர்ஸுக்கு அருகில், ஒரு அதிகாலை பொழுதில் நடந்தது.

முதிர்ந்த பெண்மணியொருவர் செய்த பிரசவத்திற்கு உதவியாகயிருந்தேன். அவர் செய்த ஒவ்வொரு காரியத்தையும் உன்னிப்பாகக் கவனித்தேன். அப்போது கிடைத்த அனுபவத்தை, என்னுடைய 'அழகு' என்னும் சிறுகதையில் எழுதியிருக்கிறேன். படைப்பு என்பதே ஆழ்மன முகிழ்விலிருந்து பிறப்பதுதானே" எனக் சுட்டிக்காட்டினார்.

இந்த அனுபவங்கள் நடந்து பல ஆண்டுகளான நிலையில், எப்படி பதற்றமேயில்லாமல் சூழ்நிலையைக் கையாண்டீர்கள்?

இதில் பதற்றப்பட ஒன்றுமில்லை. பிரசவத்திற்காகக் கர்ப்பிணியை உட்கார வைத்தாயிற்று. தயங்கிக் கொண்டிருந்தால் நிலைமை கை மீறிவிடும். தலையை நிலத்தில் சாயவிடாமல் பார்த்துக் கொள்ள, அவளுடைய மாமா நிற்கிறார். என்னைத் துணியை விலக்கி பார்க்கவிடாமல், கர்ப்பிணி தயங்கியதால், இந்தியில் பேசினேன். அதன் பின்னரே அனுமதித்தார்.

நான் காலை அகற்றிப் பார்க்கும்போது, பனிக்குடம் உடைந்து நஞ்சு வெளியேறியிருந்தது. தன்னியல்பாகவே சுகப் பிரசவமானது. தூய்மைக் காரணிகளில்லாமலே குழந்தையை ரத்தத்தோடு கையிலெடுத்தேன். நான் இதைச் செய்தாலும்கூட, மருத்துவப் பணியாளர்கள் வந்துதான் தொப்புள் கொடியை, மருத்துவ உபகரணங்களால் வெட்டினர். பிரசவிப்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கை உந்துதல்தானே, என்றார்.

இந்தச் சம்பவத்தின்போது, அப்பகுதியில் உதவிக்கு வராத பெண்கள் மீது ஆதங்கம் ஏற்பட்டதா?

உதவிக்கு நான் என் மகளையே அழைத்து வந்துவிட்டேன். ஆனால், உதவிக்கு வராமல், சுற்றி வெறுமனே நின்று வேடிக்கைப் பார்த்தவர்களைக் கண்டதும் முதலில் கொஞ்சம் கோபம் வந்தது. பின்னர் யோசித்து பார்க்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அங்கிருந்த அனைவருமே, அவர்களின் பிரசவத்தைத் தவிர வேறு யாருடைய பிரசவத்திலும் பங்கு வகித்ததில்லை.

ஒரு விஷயத்தைப் பார்த்தால்தானே அனுபவம் பிறக்கும். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலைப் புரிந்துகொண்ட பின்னர் கோவம் தணிந்து, தலைமுறை இடைவெளியைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினேன்.

இந்த தலைமுறைகளிலெல்லாம், மருத்துவ அறைக்குள் சென்றதும் பிரசவம் பார்க்கப்படுகிறது. அதிலும் பெரும்பலானோருக்கு மயக்க நிலையில்தான் பிரசவம் நடக்கிறது. பிறகெப்படி, பிரசவம் குறித்த புரிதல் உண்டாகும். மனித பாரம்பரியத்திலிருக்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்வு குழந்தை பிரசவித்தல். தாய்- மகள்- பேத்தி- என இந்தச் சங்கிலி தொடர்கிறது.

ஒருவர் மற்றவருக்கு கடத்தக்கூடிய உடலியல் சார்ந்த பேருண்மையான பிரசவத்தைப் பற்றி அனுபவ அறிவை கடத்தாமல் ஒரு தலைமுறை இடைவெளியை, நாகரிக சமூகத்தில் நவீனம் என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறோம். இது எதிர்கால சமூகத்திற்கு நல்லதல்ல.

பெண்களிடமிருந்தே பெண்களைப் பிரித்து வைத்து, பிரசவமென்பதை மருத்துவத் துறை சார்ந்த அறிவாக மட்டுமே மாற்றியுள்ளோம். இதற்காக, மருத்துவத் துறையில் தனிப்பிரிவில் வல்லுநர்கள் இருக்கலாம். ஆனால், பெண் தனது உடல் குறித்தான விழிப்புணர்வை இழந்திருக்கிறாள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 50 வருடங்களுக்கு முன்னால், என் அம்மாவிற்கு இருந்த மனவலிமை, இப்போதிருக்கும் பெண்களுக்கு இல்லை, என ஆதங்கப்படும் சந்திரன் மற்றொரு விளக்கத்தையும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.

"இதைப் பற்றியெல்லாம் நான் பேசும்போது நண்பரொருவர், வீட்டிலேயே எல்லா பெண்களுக்கும் பிரசவம் பார்க்கச் சொல்றீங்களா என ஆவேசப்படுகிறார். என்னுடைய வாதம் அதுவல்ல. மருத்துவத்தையும், மருத்துவர்களையும் புறக்கணிக்கச் சொல்லுவது என் நோக்கமல்ல.

பிரசவத்திற்குச் செல்லும் பெண்ணுக்கோ, அல்லது அவளைச் சுற்றியிருப்பவர்களுக்கோ இந்த விழிப்புணர்வு இருந்தால் உதவியாகயிருக்குமெனச் சொல்கிறேன். இதுபோன்ற நெருக்கடி காலத்தில், மருத்துவமனை செல்ல முடியாத பட்சத்தில் பெண்களே பெண்களுக்கு உதவ முடியும்.

தற்போது ஏற்பட்ட கையறு நிலையில்லாமல், அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்பட வாய்ப்பாகயிருக்கும். பெண்களைப் பற்றி பெண்களுக்கே விழிப்புணர்வு இல்லையெனில், ஆண்கள் எப்படி இதைக் கையாள முடியும். பெண்களை அவர்களின் உடல் குறித்து அறிய செய்வது அவசியம்" என அழுத்தமாகச் சொல்கிறார் சந்திரன்.

மனிதனுடைய வாழ்க்கையே ஒருவருக்கொருவர் உதவியாகயிருக்கும் கூட்டு வாழ்க்கை முறைதான். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களிடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். மனித தலைமுறைகளில் ஏற்படும் இடைவெளிகள், 'தன்னைத்தானே அறிந்துகொள்ளும் வாய்ப்பைக்கூட' அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளும்.

அந்தச் சம்பவம், மேலும் நடைபெறாமலிருக்க பாரம்பரியத்தை மீண்டும் பழக்கப்படுத்த வேண்டும். இது, வெறும் பிரசவம் சார்ந்த விஷயமல்ல... வாழ்க்கைச் சார்ந்தது!

Last Updated : Apr 19, 2020, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details