தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamilisai Soundararajan: கொடுக்கின்ற மசோதாவிற்கு எல்லாம் ஸ்டாம்ப் ஒட்ட ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்! - ஸ்டாம்ப் ஒட்ட கவர்னர்கள் ஒன்றும்

Governor Tamilisai Soundararajan Byte: கொடுக்கின்ற மசோதாவிற்கு எல்லாம் ஸ்டாம்ப் ஒட்ட ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை, கவர்னர் ஒரு பில்லை வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும் என தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

Tamilisai Soundararajan
தமிழிசை சௌந்தரராஜன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 5:50 PM IST

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும் போது, நொய்யல் திருவிழா நிகழ்ச்சியிலும் பொள்ளாச்சியில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க வந்துள்ளேன். தமிழகத்திற்கு வருவது எப்பொழுதுமே எனக்கு விருப்பம் உடையது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாமலும் கழிவுகள் சேர்க்கப்படுவதாகவும் செய்திகள் வந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது இன்று மாலை அதனை பார்க்க உள்ளேன். நீர்நிலைகள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பிரதமர் வெளிநாட்டில் இருந்து வந்த உடனேயே பெங்களூர் இஸ்ரோ நிலையத்திற்கு சென்று சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு விஞ்ஞானிகளுக்கு எல்லாம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த அசதியை கூட உணராமல் வாழ்த்து தெரிவித்த ஊக்கம் தான், சந்திராயன் 3 வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அது மட்டும் இன்றி அனைத்து மாநில தொழில்நுட்ப வல்லுனர்களின் தொழில்நுட்பம் அதற்கு உதவி செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பெருமையை நாம் அடைந்திருக்கிறோம். இதற்கு பாரத பிரதமர் மிக முக்கிய காரணம். ஏனென்றால் கரோனா தடுப்பூசி ஆரம்பகட்டத்தில் இருக்கும்போது பிரதமர் ஹைதராபாத் வந்து PPT கிட் உடையை அணிந்து அனைத்து விஞ்ஞானிகளையும் பார்த்து ஊக்கமளித்தார் அதனால் தான் தடுப்பூசி விரைவுபடுத்தப்பட்டது. யார் என்ன விமர்சனம் வைத்தாலும் உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு நிலாவின் தென் துருவத்திற்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்னும் பல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் இந்தியா செய்ய உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் மட்டுமின்றி ஆளுநர் என்றாலே அந்த பதவியை துச்சமாக பேசுவதை நான் பார்த்து வருகிறேன். டிவி விவாதத்தில் கூட, தரக்குறைவான வார்த்தைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர் பயன்படுத்துகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்றே ஆளுநரை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில் ஆளுநர் நிலைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சண்டையை முடித்து வைப்பதற்கு என்ன வழி என்று பார்க்க வேண்டும். என்ன பிரச்சினை இருந்தாலும் முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து அதற்கான விவாதங்களை நடத்தி முடிவுகளை கொண்டு வரலாம் என்று 167வது பிரிவு சட்டம் கூறுகிறது. ஆனால் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தாமல் ஆளுநரை விமர்சனம் செய்து கொண்டு தான் இருப்போம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநரை விமர்சனம் செய்வதை தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாரே வேறு என்ன செய்துள்ளார். 167வது பிரிவை இவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் அடுத்த நாள் முரசொலி பிரிவு தான் பயன்படுத்தப்படும். பாரதியார் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரும். அமைச்சர் பொன்முடியும் பேசாதது குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மாணவர்களுக்கு நாம் எதை சொல்கிறோம், மாற்றுக் கருத்து இருந்தாலும் தோழமையோடு தான் அனைவரும் பழகுவார்கள் என்ற கருத்தை நாம் சொல்ல வேண்டுமா, மாணவர்கள் முன்னாலேயே சண்டை போட வேண்டும் என்பது சரியான கருத்து அல்ல.

தமிழ்நாடு முதலமைச்சரும் ஆளுநரும் சந்தித்து பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதலமைச்சர் அதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். முதலில் ஆளுநர் குறித்து விமர்சனம் செய்யாதீர் என முதலமைச்சர் அவரது கட்சிக்கு கட்டளையிட வேண்டும். தமிழகத்தில் ஒரு கெட்ட பழக்கம் உள்ளதென்றால் "மாற்றுக் கருத்து கூறினால் அதனை வறுத்தெடுக்க வேண்டும் இல்லையென்றால் அவர்களை விட்டு வைக்கக் கூடாது" என்ற சூழ்நிலை உள்ளது, அதேபோல் கருப்புக்கொடி காட்டுவதும் நல்ல பழக்கம் அல்ல. கருத்துக்களால் மோதுங்கள் கருப்பு கொடியால் மோதாதீர்கள் என்பதுதான் எனது கருத்து. தமிழகம் எந்த சரித்திரத்தை எழுதப்போகிறது உலகத்திற்கு எந்த சரித்திரத்தை சொல்ல போகிறோம், விமர்சனம் செய்வதை தவிர்த்து விட்டு விமரிசையாக என்ன செய்யலாம் என்பதை முன்னெடுங்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. தெலுங்கானாவிலும் நீட் ஆதரிக்கப்படுகிறது இன்னும் சொல்லப்போனால் அங்குள்ள நிர்வாகிகளும் அமைச்சரும் நீட் வந்ததற்கு பின்பு பல பேருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இது அனாவசியமாக அரசியல் ஆக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு எதிராக செய்கின்ற துரோகம் என்றே நான் கூறுவேன். நீங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டு அதுதான் சரி என்று பிடித்துக் கொண்டிருப்பது சரியல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கார்த்திக் சிதம்பரத்தின் பேட்டியையும் நான் பார்த்தேன் அவரது அம்மா தான் நீதிமன்றத்தில் வாதாடி நீட் தேர்வை பெற்று தந்தார்கள்.

இதையும் படிங்க:Shiv Shakti Point: நிலவில் என்ன செய்கிறது பிரக்யான் ரோவர்.. இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ!

திருப்பதியில் 13 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த ஒருவர் நீட் தேர்வு எழுதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி மருத்துவக் கல்லூரியில் அவர் சேரப் போகிறார். எனவே வெற்றி கதைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள் வெட்டி கதைகளை எடுத்துக் கூறாதீர்கள். தற்கொலை செய்வது மிக மிக தவறு. உயிரை காக்கும் தொழிலை படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உயிரை போக்குவது எவ்வாறு சரியாக இருக்கும்?. உயிரைப் போக்குவதை கொண்டாடுகிறார்கள் என்பது தான் மிக மிக கவலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி திண்டாட்டத்துடன் இருக்கும் குடும்பங்களுக்குச் சென்று இவர்கள் ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை காயப்படுத்தி அங்கு ஒரு டிராமா செய்வதெல்லாம் சரியில்லை. எனவே ஒரு ஆக்கப்பூர்வமான நிலைக்கு வாருங்கள். இந்தியாவில் ஒரு கல்வி நிலை கொண்டு வரும் பொழுது தமிழகத்திற்கு எதற்கு தனியாக ஒரு நிலையை கொண்டு வருகிறீர்கள்.

இந்தியாவிலேயே முதல்முறையாக காலைச் சிற்றுண்டியை முதல்வர் அளித்துள்ளார் என்ற செய்தி வருகிறது ஆனால் அது புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டு அதில் உள்ளவற்றை பிட்டு பிட்டாக பிட் அடிப்போம் என்று கூறினால் என்ன அர்த்தம்? தேசிய கல்விக் கொள்கையில் இருந்து பிட் அடித்து மாநில கல்விக் கொள்கையை கொண்டு வருகிறீர்கள். மாநில கல்விக் கொள்கையை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தீர்கள் தானே, கச்சத்தீவு, கல்வி என அனைத்தையும் தாரை வார்த்துவிட்டு இப்பொழுது நான் கொண்டு வருகிறேன் என்று கூறினால் அதனை யார் நம்புவார்கள்? மாணவர்கள் மத்தியில் சாதி கலவரம் வருகிறது, வேங்கை வயலை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். உத்தரபிரதேசம் ரவுடிகள் சாம்ராஜ்யமாக இருந்தது அமைதி பூங்காவாக யோகி ஆதித்யநாத் ஆக்கியுள்ளார். இங்கு அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த முறையும் பிரதமராக வருவார் அதில் எந்த குழப்பமும் இல்லை. நல்லது நடந்து கொண்டிருக்கும் பொழுது நீங்கள் எதையாவது பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்தெல்லாம் நான் பேசக்கூடாது என தெரிவித்தார். தலைவர்கள் வரும்போது வரவேற்பு என்பது ஒரு பாசிட்டிவ் அப்ரோச், கருப்புக்கொடி என்பது ஒரு நெகட்டிவ் அப்ரோச். கொடுக்கின்ற மசோதாவிற்கு எல்லாம் ஸ்டாம்ப் ஒட்ட கவர்னர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை, கவர்னர் ஒரு பில்லை வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:PM Narendra Modi: சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாள் 'தேசிய விண்வெளி தினம்' : பிரதமர் மோடி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details