தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை விமான நிலையப் பணிகள் 85% நிறைவு - அமைச்சர் செந்தில் பாலாஜி - அதிமுக ஆட்சி

கோவை மக்கள் மற்றும் தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையான விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 85 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Nov 9, 2022, 7:44 PM IST

கோவைமாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் கட்சி சார்பில் பங்கேற்றார்.

இதில் திருப்பூர் ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ள நிலையில் முதலமைச்சருக்கு கோவை விமான நிலையத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிப்பது, இந்தி திணிப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'நாளை காலை 10 மணியளவில் முதலமைச்சர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

இதேபோல வருகின்ற 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு முகாமில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிகள் சிறப்பாக செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது'என்றார்.

அப்போது கோவையில் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, '211 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலைகள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போட வேண்டிய சாலைகள். கடந்த ஆட்சியில் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள், இந்த சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் சில அலங்காரப் பணிகளுக்குச் செலவு செய்யப்பட்டது. ஆனால், அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மக்களின் அடிப்படை தேவையினை நிறைவேற்ற 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தற்போது 26 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் மார்ச் மாதத்திற்குள் துவங்கும். இதேபோல நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கும்.

கோவை மக்கள் மற்றும் தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையான விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 85 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் 2, 3 மாதங்களில் நிறைவு பெறும். இங்கு செய்யப்பட்ட பணிகளைப் பார்த்து அவர் கருத்து சொல்ல வேண்டும்.

கோவையில் நிலுவையில் உள்ள பாலங்கள் விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவிநாசி சாலை பாலப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. பால கட்டுமானப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் திமுக அலுவலகம் கட்ட அவிநாசி சாலையில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. அதன் டிசைன் ரெடியாகி வருகிறது. விரைவில் பூர்வாங்கப் பணிகள் துவங்கும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சவால்களை சிறப்பாக எதிர்கொண்ட தமிழ்நாடு காவல்துறை - டிஜிபி பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details