மத்திய அரசானது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (AAI-Airports Authority of India) சொந்தமான விமான நிலையங்களை தனியார்மயமாக்கி வருகின்றது. ஏற்கனவே அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் விமானநிலையங்கள் தனியார்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் அமிர்தசரஸ், புவனேஸ்வர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மேலும் பத்து விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. எனவே இதனை கண்டித்து, கோவை விமான நிலைய ஊழியர்கள், இன்று முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'மத்திய அரசு தனியார்மயமாக்கலை நிறுத்தவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதியன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலுள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்குச் சென்று போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.