தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எழுந்து நின்று வாங்குங்க'... மாவட்ட ஆட்சியருடன் அதிமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்! - admk collector clash

மாவட்ட ஆட்சியரை எழுந்து நின்று மனுவைப் பெற்றுக்கொள்ளும்படி கோவை மாவட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

coimbatore
கோவை

By

Published : Jul 30, 2021, 3:57 PM IST

கோவை மாவட்ட ஆட்சியரிடம், தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும், மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப் பணிகளை ரத்து செய்யக்கூடாது, அரசு நிகழ்ச்சிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அளித்தனர்.

அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மனுவை அமர்ந்தபடியே வாங்கினார். அவரை எழுந்து நின்று மனுவை வாங்கும்படி சட்டப்பேரவை உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக எழுந்து நின்று மனுவைப் பெற்றுக்கொண்டார்.

கோவை ஆட்சியருடன் அதிமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, "கோவையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், தடுப்பூசிகளை அலுவலர்கள் மூலம் டோக்கன்களாக விநியோகம் செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம்.

கோவையில் பல நேரங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் புறக்கணித்துவிட்டு, சில ஆளுங்கட்சியினர் எவ்வித பதவியும் இல்லாமல் அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும்.

அதிமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர் சந்திப்பு

முன்னாள் முதலமைச்சரால் கோவையில் தொடங்கப்பட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். முந்தைய அரசால் கோவையில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒப்பந்தம் போடப்பட்ட பணிகள் இந்த அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளை மீண்டும் தொடங்கவேண்டும். கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதோ என்ற ஐயம் கோவை மக்களிடமும் எங்களிடமும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சியரை எழுந்து நின்று மனுவை வாங்கும்படி வலியுறுத்தினீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் சென்றார்.

இதையும் படிங்க:போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது குறைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details