கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் இளைய தலைமுறையினருக்கு கிராமியக் கலைகளை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கனகராஜ் 'சங்கமம்' என்ற பெயரில் கலைக் குழுவை நடத்திவருகிறார்.
இவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களை தேர்வுசெய்து அக்கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஒயிலாட்ட கலையை சிறப்பாக கற்பித்து மேடைகளிலும் அரங்கேற்றிவருகிறார்.
இதன் ஒரு பகுதியாக 21ஆவது அரங்கேற்றமாக கணியூர் அருகே உள்ள சந்தோஷ் நகர் பகுதியில் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் வண்ண உடைகளை உடுத்தி ஒயிலாட்டம் ஆடி மக்களை மகிழ்வித்தனர்.
இசைக்கு ஏற்ற பாடலுடன் நடனமாடி மூன்று மணி நேரம் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். கலாசாரத்தை பறைசாற்றும் இந்த ஒயிலாட்டத்தை தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்றுவருகின்றனர்.
ஒயிலாட்டம் ஆண்கள் ஆடும் ஆட்டம். ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். இந்நிலையில் ஒயிலாட்டத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதைவிட இதனை அனைவரும் கற்க வேண்டும் என்ற முனைப்புடன் தலைமை ஆசிரியர் கனகராஜ் பல முயற்சிகளை செய்துவருகிறார். பணி முடிந்து வீட்டில் ஓய்வு எடுக்கவேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் இவரது செயல் பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வருகிறது.