கோயம்புத்தூர்: கோவை கொடிசியா அரங்கில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) கையெழுத்தாகின.
கோவையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ளது. ரூ.485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் இந்த நிறுவனம் மூலம் 1960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர 13 ஆயிரத்து 413 கோடி ரூபாய் மதிப்பில் 13 புதிய நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
அரசின் பணி
மாநாட்டில், மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 வின் கைபேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும், "தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021” மற்றும் கொடிசியா அமைப்பின் பொன்விழா நிறைவையொட்டி காலப்பேழை புத்தகத்தை (Coffee Table Book) ஆகியவற்றை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை 6 மாதத்தில் சாதித்து இருப்பதாக தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர். அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மக்களைக் காப்பது தான் அரசின் பணி. இதில் இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
நம்பர் ஒன் தமிழ்நாடு
5 மாதங்களில் இது 3வது முதலீட்டாளர் மாநாடு. அரசின் மீது நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றனர். ஜூலை, செப்டம்பர், நவம்பர் என இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு. இதே வேகத்தில் போனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விரைவில் உருவாகும். பல மாநில முதல்வர்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக என் பெயரைச் சொல்கின்றனர். இது அரசுக்குக் கிடைத்த பெருமையல்ல. மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்லும் வகையில் செயல்பட வேண்டும்.