கோயம்புத்தூர்:காவிரி பிரச்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, கர்நாடக முதமைச்சர் சித்தராமையாவை சந்தித்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 12ஆயிரத்து500 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறக்க, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது திமுகவின் நெருங்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் சித்தராமையா தான் கர்நாடக முதலமைச்சராக இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு சென்றால், விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்கும் அளவுக்கு மிகமிக நெருங்கிய நண்பரான சிவக்குமார் தான், கர்நாடக துணை முதலமைச்சராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்கும், இந்திய கூட்டணி கட்சி கூட்டத்துக்கும் பெங்களூரு சென்று, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் அன்பை பொழிந்தவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போதெல்லாம் காவிர் பிரச்னை பற்றி கவலைப்படாமல், இப்போது தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, உடனடியாக பெங்களூரு சென்று நெருங்கிய நண்பர்களாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.
இந்தியாவை காப்பாற்றதான் இந்திய கூட்டணியை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி வருகிறார். இந்த கூட்டணி, காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் என்றால், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நாடகமாடும் என்றால் இந்த கூட்டணியில் தமிழ்நாட்டிற்கு என்ன பலன்? தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர முடியாத இந்த கூட்டணி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு எப்படியெல்லாம் துரோகம் இழைக்கும் என்பதை தமிழ்நாடு மக்கள் நினைத்துப் பார்க்க தொடங்கி விட்டார்கள்.