தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பாஜக - திமுக தரப்பினரிடையே மோதல் - நடந்தது என்ன? - பாஜக திமுக மோதல்

கோவை அருகே தரமற்ற சாலை போடப்பட்டதாக முறையிட்ட பொதுமக்களை திமுக கவுன்சிலர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகராறு பின்னணியில் பாஜக இருப்பதாக திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 11, 2023, 9:01 PM IST

பாஜக - திமுக தொண்டர்களிடையே மோதல்

கோயம்புத்தூர்: கோவில்பாளையம் அருகேவுள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சியில் 9 ஆவது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பினர் புகார் எழுபியுள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு (பிப்.10) லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9ஆவது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் சிலர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை குறித்து கேள்வியெழுப்பி உள்ளனர். அப்போது அங்குள்ள சிலர் மோகனுக்கு ஆதரவாக பேசிய நிலையில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் திமுக கவுன்சிலர் மோகனும் எதிர் தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது குறித்து கோவில்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக கவுன்சிலர் பொதுமக்களை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து திமுக கவுன்சிலர் மோகனிடம் கேட்டபோது, “என்ன நடந்தது என தெரியாமல் எனக்கு எதிராக பாஜகவினர் வீடியோவை பரப்பியுள்ளனர். நேற்று மக்களை கூட்டி ஆலோசணை கூட்டம் நடத்தினோம். அப்போது பாஜகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் சாலை தரமில்லை என புகாரளித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கும், இப்பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து அப்பெண் பாஜகவினரை போனில் அப்பகுதிக்கு வரவழைத்தார். இதையடுத்து வந்த பாஜகவினர் எங்களை தகாத வார்த்தைகளால் பேசினர். முத்து என்பவரை அடித்து உதைத்தனர். பெண்களின் உடைகளை பிடித்து இழுத்தனர். இதனை தட்டி கேட்க சென்றபோது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதற்கு முன்பு இரண்டு மணி நேரம் நடந்த பிரச்னை வீடியோவை வெளியிடவில்லை.

இக்கூட்டத்திற்கு பிரச்னை செய்ய வேண்டுமென பாஜகவைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் வந்தனர். உள்ளூரில் எனது பெயரை கெடுக்க வேண்டும் என திட்டமிட்டு செய்துள்ளனர். சுயமரியாதையை தொடும்போது, அதற்கு உண்டான விளைவுகளை செய்து தான் தீருவார்கள். வீடியோ பரவுவதால் ஒன்றும் பிரச்னையில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இடைத்தேர்தல்: பாஜகவின் தாமதமான நிலைப்பாடு.! ஈபிஎஸின் நடவடிக்கை என்ன..!

ABOUT THE AUTHOR

...view details