'தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே' சின்னத்தம்பிக்கு அப்புறமா தமிழ்நாட்டுல பிரபலம் ஆன இன்னொரு சின்னத்தம்பி கோவை தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை. சின்னத்தம்பி தனது செய்கைகளால் டிவி, ரேடியோ, இன்டர்நெட் மட்டுமல்லாது தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்து விட்டான். ஊருக்குள் வந்த சின்னத்தம்பியை தூரமாக காட்டிற்குள் விட்டாலும் பழையபடி இங்கேயே 100 கிமீ. தூரத்துக்கு 'நடராஜா' சர்வீஸிலே வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டான். இதை காட்டில் விடுவதா அல்லது கும்கியாக மாற்றுவதா என பெரிய களேபரம் ஆகி விவகாரம், கோர்ட் வரை சென்று விட்டது. ஆனால் கும்கியாக மாற்ற யானை துன்புறுத்தப்படுகின்றன என்று ஒருபுறம் குற்றம்சாட்டு வைக்கின்றனர்.
யானையை கும்கியாக்குவது என்பது நம் கட்டளைக்கு அதை கீழ்ப்படிய வைப்பது. யானையை மரத்தால் ஆன கூண்டுக்குள் விட்டு அதை 'மகவுட்' எனப்படும் பாகன்களை கொண்டு பழக்கப்படுத்துவர். 'மகா எத்தன்' என்பதே மருவி 'மகவுட்' என்றானது. அவர்கள் யானைகளை ஏமாற்றியே தனது வழிக்கு கொண்டு வருவார்கள். அவர்கள்தான் யானைக்கு உணவளிப்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யானையிடம் பழகி யானையின் நம்பிக்கையை பெறுவர். யானைகளை அடித்து, துன்புறுத்தி தன் வழிப்படுத்தும் வழக்கம் இருந்தது. தற்போதும் இருக்கிறது. ஆனால் அது மனிதாபிமானமற்ற செயல்.
தெப்பக்காடு யானைகள் முகாம் உலக பிரசித்தி பெற்றது. அங்கு பாகங்களின் கையில் 'அங்குசம்' எனும் ஈட்டி கூட இருக்காது. யானைகளிடம் மனித நேயத்துடன் பழகுகிறார்கள். கும்கி முறை என்பது மிகவும் கொடூரமானது என்று வெளிநாடுகளில் இருக்கும் வீடியோவை பார்த்து நம் மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்பதை தெப்பக்காடு வந்து உணரலாம். சில அரைவேக்காட்டு விலங்கு ஆர்வலர்கள் தவறாக சித்தரித்து நம்மை மூளை சலவை செய்துள்ளனர். சின்னத்தம்பி யானை 100 கி.மீ நடந்தே வந்து விட்டது. காட்டுக்குள் செல்ல மறுக்கிறது. அதை மீண்டும் மீண்டும் விரட்டுவதால் வெறுப்படைந்து ஆட்கொல்லியாக மாறிவிட வாய்ப்புள்ளது. பின்னர் 'அவ்னி' புலியை போல நாமே அதை கொள்ளும் நிலை சின்னத்தம்பிக்கு வந்து விட கூடாது. அதற்கு பதிலாக அந்த யானையை விரட்டாமல் அது இருக்கும் இடத்திலேயே உணவளித்து 'தாஜா' செய்து நம் வழிக்கு கொண்டுவந்து விடலாம்.
சின்னத்தம்பி இலகுவான, சாதுவான யானை. அதை பழக்கி, பராமரித்து நல்ல காரியங்களுக்கு வைத்துக்கொள்ளலாம். சின்னத்தம்பியை அடக்க அழைத்து வந்திருக்கும் மாரியப்பன் ஒரு காலத்தில் சமயபுரம் கோயிலில் அடங்காமல் திரிந்தவனே. அது தெப்பக்காட்டில் பராமரிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டு நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. சின்னத்தம்பி கொலைகாரனாக மாறுவதிலிருந்து தப்பிக்கவும், நன்றாக வாழவும் கும்கியாக்குவதே சிறந்தது. காட்டிலிருந்து வெளியேறும் யானைகளை வனத்துறையினர் காட்டிற்குள் கொண்டுபோய் விட முயற்சி செய்வார்கள். ஆனால் இயந்திரங்களை பயன்படுத்தி அதை பிடிக்கும் விதம் தவறானது. அந்த காலத்தில் யானைகளுக்கு காயம் ஏற்படும் என்று சணல் கயறுகளையே பயன்படுத்தினர். யானைகளை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும்.
கோவை மதுக்கரை பகுதியில் அட்டகாசம் செய்து வந்த மதுக்கரை மகாராஜா யானையை பிடிப்பதற்காக மருத்துவர் போட்ட மயக்க ஊசி சரியாக வேலை செய்ய வில்லை. அதனால் 'ஓவர் டோஸ்' கொடுக்கப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த யானையை கூண்டில் அடைத்தவுடன், மூர்க்கமான அந்த யானை கூண்டில் மல்லுக்கட்டியதில் தலையில் அடிபட்டு இறந்தது. இந்த சம்பவத்தினாலேயே யானையை கும்கியாக மாற்ற கூடாது என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது.
தெப்பக்காடு, டாப்ஸ்லிப் யானை முகாம்களில் காட்டுவாசி மக்களை கொண்டு பராமரிக்கப்படுகிறது. பழக்கத்திற்காக அடிக்கவும் செய்கின்றனர். இதற்கு நல்ல பழமொழியே இருக்கிறது. 'ஒடிச்சி வளக்காத முருங்கையும் அடிச்சி வளக்காத குழந்தையும் உருப்படாது'. சில விஷயங்களை மாற்ற முடியாது என்றால் அப்படி தான் செய்தாக வேண்டும். இதை நல்ல விஷயத்துக்காக செய்கிறோம். அதற்காக தினமும் அடித்துகொண்டே இருந்தால் ஒரு நாள் அவனையே யானை கொன்று விடும். 'சாது மிரண்டால் காடு கொள்ளாது'. அதுதான் சமயபுரம் மசினி யானைக்கும் நடந்தது.