கோவையை அடுத்த காரமடையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்த 4 வயது சிறுமி 2019 பிப்ரவரி 1ஆம் தேதி உடல்நிலை சரியில்லை எனப் பெற்றோரிடம் கூறி இருக்கிறார். சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
சிறுமி படித்த பள்ளியின் வேன் ஓட்டுநரான அத்திபாளையத்தை அடுத்துள்ள சென்ராயபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (37), உதவியாளரான காரமடை கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (50) ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியை பள்ளி வேனில் கடைசி நிறுத்தத்தில் தினமும் இருவரும் இறக்கிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அப்போது வேனில் சிறுமியைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதைப் பயன்படுத்திக்கொண்ட ஓட்டுநரும், நடத்துநரும் ஜனவரி 29ஆம் தேதி மாலை மயக்க ஊசி செலுத்தி வேனிலேயே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து, இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கு கோவையில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கோவிந்தராஜ், மாரிமுத்து ஆகிய இருவரும் இயற்கையாக இறக்கும்வரை ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று (டிசம்பர் 24) தீர்ப்பு வழங்கினார்.