கோயம்புத்தூர்: வாளையாறு மற்றும் மதுக்கரைப்பகுதிகளில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் 1978ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தவகையில் இரு நாட்களுக்கு முன்னர் கேரளாவில் இருந்த வந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், கருவுற்ற யானை உள்பட மூன்று யானைகள் உயிரிழந்தன.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு தலைமை வன உயிரினப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் விபத்து நடந்த வாளையாறு மற்றும் மதுக்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
யானைகள் ரயிலில் சிக்கி உயிரிழப்பதை தடுப்பது குறித்து வனத்துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் ஈடிவி பாரத் தமிழுக்கு சேகர் குமார் நீரஜ் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "பாலக்காடு வழியாக கோவைக்கு இயக்கப்படும் ரயில் இன்ஜினில் உள்ள லைட் வெளிச்சம் மிகக் குறைவாக உள்ளதால், யானைகள் பாதையில் நிற்பது தெரிவதில்லை.
அதன் வெளிச்சத்தை அதிகரிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.
தெர்மல் ட்ரோன் கேமரா வைத்து கண்காணிக்கப்படும்
வாளையாறிலிருந்து மதுக்கரைக்கும், மதுக்கரையிலிருந்து வாளையாருக்கும் இரவு நேரத்தில் இயக்கப்படும் ரயில்களில் வனப் பணியாளர்கள் பயணித்து, வேகத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளது.
இரவு நேரங்களில் தெர்மல் ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. ரயில் பாதையில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறியும் ஒன்பது பேர் கொண்ட குழுவில் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.