கோயம்புத்தூர் :ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சரை நீக்க ஆளுநருக்கு உரிமை இருக்கா? என்பதில் பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு எப்படி எதிர்க்கிறார் என தெரியவில்லை. முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி ஆளுனர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பது முதலமைச்சருக்கு தெரியும். ஆனால், முதலமைச்சர் வரம்பு மீறி செயல்படுகிறார்.
முதலமைச்சரின் கவனம் ஐந்தாண்டுகளில் இப்படி மாறியுள்ளது ஏன் என்று தெரியவில்லை. ஆளுநர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு பாஜக வேறு, ஆனால் கடிதத்தை படிக்கும் போது தமிழ்நாடு அமைச்சரவையில் 99% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆளுநர் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு. இது தனிமனித தாக்குதல் கிடையாது முதலமைச்சர் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது.
ஒரு மனிதனுக்காக அரசங்கத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரைக் செய்துள்ளனர். கரூரில் கட்சி வாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்ற கட்சிகளை பழி வாங்குகிறது. இதை அரசு சரி செய்ய வேண்டும். செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளார்” என்றார்.