நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹெரோன் பாலை இரண்டு நாள் சிபிஜ காவலலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த ஐந்தாம் தேதி பொள்ளாச்சியில் அதிமுகவிலிருந்து நீக்கம்செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹெரோன்பால் ஆகிய மூன்று நபர்களை சிபிஐ அலுவலர்கள் 5ஆம் தேதி கைதுசெய்தனர். இவர்களை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மூன்று பேரும் கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான 3 பேரில் அருளானந்தம், பாபு ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்த நிலையில் ஹெரோன்பால் மட்டும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஹெரோன் பாலை மட்டும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு வெள்ளிக்கிழமை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்து இருந்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஹெரோன்பாலுக்கு 2 நாள் சிபிஐ காவல் - Pollachi Rape case
12:11 January 11
இதை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, 2 நாள் மட்டும் ஹெரோன்பாலை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அலுவலர்களுக்கு இன்று அனுமதி வழங்கினார். விசாரணைக்குப் பின்னர் ஹெரோன்பாலை வரும் 13ஆம் தேதி 11.30 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும் எனவும் நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஹெரோன் பாலை சிபிஐ அலுவலர்கள் அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பலர் கைதாகக்கூடும் எனக் கூறப்படுகின்றது.