கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக இன்று காலை 11.30 மணியளவிலிருந்து பாஜக, அதிமுக தொண்டர்கள் காத்திருந்தனர். வெயில் கூடிக்கொண்டே சென்ற நிலையில், இல.கணேசன் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. மதியம் 1 மணியளவில் இல.கணேசன் பேசத் தொடங்கினார்.
அன்னூரில் பாஜக எம்பி இல.கணேசனின் தேர்தல் பரப்புரை உச்சி வெயிலைத் தாங்க முடியாமல் கூடியிருந்த கூட்டம் கலையத் தொடங்கியது. நாளிதழ்கள், கட்சி கொடிகளை தலையில் வைத்தப்படி பலர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியினர் நிழலுக்காக அருகேயிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்குள் சென்று மரத்தடியில் அமர்ந்தனர். தலைவர் பேச்சை கேட்காமல் நிழலுக்காக விருந்தினர் மாளிகைக்குள் செல்வதை பார்த்த கட்சி நிர்வாகிகள், உள்ளேயிருந்தவர்களை வெளியேற்றி கேட்டினை பூட்டி வைத்தனர்.
இதனால் பாஜக நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்த தொண்டர்கள், மீண்டும் திறக்கும்படி சொன்னதால் விருந்தினர் மாளிகை கேட் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தின் ஒரு பகுதியினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் நிழலில் இருந்தபடி இல.கணேசன் பேச்சைக் கேட்டனர்.