கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (50). திருமணமாகாத இவர் தனது தாயுடன் வாழ்ந்து வந்தார். அவரது தாய் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் உயிரிழக்கவே வாழ்க்கையில் தனிமைப்படுத்தப்பட்ட கிருஷ்ணசாமி, சாலையோரங்களில் இஷ்டம்போல வாழ்க்கையை கழித்து வந்துள்ளார்.
இந்த சூழலில், கோவையை சேர்ந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகிகள், கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள பிளாட்பாரத்தில் இருந்து கிருஷ்ணசாமியை மீட்டு காப்பகத்தில் அடைக்கலம் கொடுத்தனர்.
கடந்த 8 மாதங்களாக காப்பகத்தில் வசித்து வரும் கிருஷ்ணசாமி, தன் வாழ்நாளில் இதுவரை வாக்களித்ததே இல்லை. காப்பகத்தை சேர்ந்த மகேந்திரன் முயற்சியால் அவருக்கு முதன் முறையாக வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. அதன் விளைவாக இந்தாண்டு அவர் தன் வாழ்க்கையில் முதன் முறையாக வாக்களித்தார்.
50 வயதில் முதல் முறையாக வாக்களித்தவர் இதுகுறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், "வாழ்நாளில் இதுவரை வாக்களித்ததே இல்லை. இப்போதுதான் வாக்கு மையத்தை பார்க்கிறேன். முதல்முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது", என்றார்.