கோயம்புத்தூர்: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (அக்.17) இந்த வழக்கு தொடர்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனை விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
காலை 10 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை மாலை 6 மணி வரை நடைபெற்றது. விசாரணைக்கு பின் ஓட்டுநர் அய்யப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஓட்டுநர் கனகராஜ் தொடர்பான கேள்விகளையே சிபிசிஐடி போலீசார் கேட்டனர். ஓட்டுநராக இருந்தபோது அவர் குறித்து தெரிந்த தகவல்களைத் தெரிவித்தேன்.
குறிப்பாக கனகராஜின் நடவடிக்கைகள், கேரக்டர் தொடர்பாகவே கேள்விகள் கேட்டனர். 3 சிபிசிஐடி அதிகாரிகள் இந்த விசாரணையில் இருந்தனர். 2 ஆண்டுகள் தான் கனகராஜ் டிரைவராக இருந்தார். ஜெயலலிதாவிடம் 6 -7 ஓட்டுநர்கள் இருந்தோம். ஜெயலலிதாவிற்கு என்னை தவிர கண்ணன் என்ற ஓட்டுநரும் இருந்தார். கனகராஜ் ஜெயலலிதாவிற்கு ஓட்டுநராக இல்லை. அவர் அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
இரவு நேரங்களில் அவர் இருப்பார். ஓட்டுநர்கள் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்க முடியாது. ஜெயலலிதாவிற்கு அது பிடிக்காது. கனகராஜ் அப்போது பேச்சுலராக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கோடநாடு எஸ்டேட் சென்றுள்ளேன். பங்களாவிற்கு உள்ளே அனுமதி கிடையாது.