கோயம்புத்தூர்:கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் சொத்து விவரங்களுக்கான சரிபார்ப்புக்காக ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியாக இல்லை என கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியுள்ளார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை கோபால்சாமி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இடையில் குறுக்கிட்ட கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, அரசு அலுவலரிடம் கையை நீட்டி பேசவேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியை சாதிப்பெயரை கூறி தகாத வார்த்தைகளால் கோபால்சாமி திட்டியுள்ளார்.
மேலும், தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால், பொய் குற்றச்சாட்டு கூறி வேலையைவிட்டு நீக்கி விடுவதாகவும் கோபால்சாமி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கண்ணீர்விட்டு அழுதபடி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.