கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம், அசோக் நகர் பகுதிகளில் நேற்று (ஜூலை 6) ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான ஊழியர்களை வைத்து தொழில் நிறுவனங்கள் இயங்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கிவரும் ஒரு பட்டறையில் சுமார் 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் செல்வபுரம் பகுதியில் ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கரோனா தொற்று பரவிய நகைப்பட்டறையில், முகக்கவசம், தகுந்த இடைவெளி முறையாக கடைப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அப்போது ஆட்சியர் ராசாமணி நகைப்பட்டறை உரிமையாளரை கடுமையாக திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.