ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி வீரம்மாள்(55). கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி காரணமாக அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் ராட்சத கேன்சர் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இது 24 செண்டி மீட்டர் நீளமும், 2 கிலோ எடையும் கொண்டதாக இருந்ததால் கட்டி, ரத்த குழாய் வரை பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ரீனஆஞ்கியோ எம்பாலிஷேஷன் கருவிமூலம் அந்த கட்டியின் அளவு மற்றும் எடையை குறைத்து, பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ரூ.2.5 கோடி மதிப்புள்ள நவீன இயந்திரத்தை சமீபத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
தற்போது வரை கோவை அரசு மருத்துவ மனையில் 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சைகள், கோவை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.
மூதாட்டியுடன் மருத்துவமனை முதல்வர் இதையும் படிங்க:பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை - அரசு மருத்துவமனையில் அவலம்!