கோவை: தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி 177 செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அனைத்து துறைகளும் இணைந்து கூட்டு தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டதில் 1 கோடியே 10 லட்சத்து 77276 கன மீட்டர் அளவு செம்மண் உரிய அனுமதியின்றி வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து 177 செங்கல் சூளைகளுக்கும் 374 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார்.
தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன், மற்றும் இயற்கை ஆர்வலர் முரளிதரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடாகம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளால் இயற்கை வளம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். அதே சமயம் யானை வழித்தடம் மறிக்கப்படுவதோடு வனவிலங்குகள் சட்டவிரோதமாக மண் எடுக்க தோண்டப்பட்ட குழிகளில் விழுந்து உயிரிழப்பதாகவும் மனு தாக்கல் செய்தனர்.
இதனை அடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 6.1.2021, 10.2.2021 மற்றும் 9.12.21-ம் தேதிகளில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்ததை உறுதி செய்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவினை எதிர்த்து 177 செங்கல் சூளை உரிமையாளர்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி புதிய உத்தரவினை வழங்கி உள்ளார். அதில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் நேரடி விசாரணையின் போது, 119 செங்கல் சூளைகளுக்கு ஆண்டு கனிம கட்டணம் , பதிவு கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் ஆகியவை தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.