கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ளது கூடலூர் நகராட்சி. பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த நகராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கூடலூர் நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த அறிவரசு என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இவர் பதவி ஏற்ற பின்னர், ராணுவ வீரர்கள் வீடுகளுக்கு சொத்து வரி விலக்கு, இறப்பு சான்றிதழ் இலவசம் என நகராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கவனம் ஈர்த்து வருகிறார். கடந்த ஆண்டு 100 சதவீத வரி வசூல் செய்ததற்காக தமிழகத்தில் இரண்டாவது சிறந்த நகராட்சியாக இந்த நகராட்சி தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பசியின்றி மாணவர்கள் படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியதை உதாரணமாக கொண்டு, நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி உள்ளார், அறிவரசு.
விடியற்காலையில் பணிக்கு வரும் தூய்மை பணியாளர்கள் காலை நேரங்களில் உணவு சமைக்கவோ, உணவு அருந்தவோ வாய்ப்பு இருப்பதில்லை. அதனால் பசியோடு வெகுநேரம் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தூய்மை பணியாளர்கள் பசியின்றி பணியாற்றும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ளும் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டும் இன்றி, அதிகாலையில் பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களுக்கு டீ , பிஸ்கட் ரொட்டி போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், "நான் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது. மாணவர்களின் பசியாற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் போல, தூய்மை பணியாளர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.