தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அமைச்சரின் மிரட்டலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது" - வானதி சீனிவாசன்! - வானதி சீனிவாசன் அறிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மிரட்டலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது என்றும், இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

BJP
BJP

By

Published : Oct 28, 2022, 1:31 PM IST

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை பாஜகவினர் அரசியலாக்குவதாகவும், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார். என்ஐஏ முதலில் விசாரிக்க வேண்டியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைத்தான் என்றும் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மீதும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் பல தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

கார் வெடிப்பு சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் கோவை பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர், பாஜக முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததும் கோவைக்கு வந்திருக்கிறார். பாஜக அழுத்தம் கொடுத்த பிறகே கார் வெடிப்பு சம்பவம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

கோவையில் எந்த பதற்றமும் இல்லை, பாஜகதான் இதை அரசியலாக்குகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். கோவையில் எந்த பதற்றமும் இல்லை என்றால், 3,000 போலீசார் ஏன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்? 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்? மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?

அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை அறியாமலேயே, கோவை பதற்றத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு, அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிக் கொண்டே, முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே பேசியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. பத்திரிகைகள், தொழில் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவரையும் மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்திருக்கிறது.

கோவையில் நிலைமை மோசமாக இருப்பதால்தான், அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு, பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார் என்பது அவரது பேட்டியிலிருந்து தெரிகிறது.

முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் மிரட்டி இருப்பதாகவும் தகவல் வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

அமைச்சர் இப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை இரு பக்கமும் அமர வைத்துக் கொண்டு, பதற்றத்துடன் பேட்டி அளிப்பதற்குப் பதிலாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி பாஜகதான். இதுவரை 200 நிர்வாகிகளை பாஜகவும், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இழந்திருக்கின்றன.

1998ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை கொல்வதற்காகத்தான், கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அப்போதும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் இருந்தது. இப்போதும் திமுக ஆட்சியில்தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

ABOUT THE AUTHOR

...view details