கோயம்புத்தூர்: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது. இது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் நிகழ்ச்சி எனக்கூறி விழாவை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. இதனை எதிர்த்து, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜனவரி 10ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்" என்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீராமர் பிறந்த அயோத்தியில் அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பது, 100 கோடிக்கும் அதிகமான பாரத நாட்டு மக்களின் பல நூற்றாண்டு கால கனவு. அதனால்தான், காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், முக்கிய பிரமுகர்களுக்கும், 'ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை' அழைப்பிதழ்களை வழங்கியது. அனைவருமே இது தங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே நாடு முழுவதும் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. பாரதம் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும், 'ஸ்ரீராமர் கோயில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நிகழ்ச்சி' நிரல் எனக் கூறி கும்பாபிஷேக அழைப்பிதழை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் உண்மையான தலைமைக்கு இருக்கும் இந்து மத வெறுப்பை அனைவரும் அறிவர். அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது. நாட்டு மக்கள், காங்கிரஸ் கட்சியைப் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை அக்கட்சியே வழங்கியுள்ளது.