கோவை:சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கையில் இன்று நிலைமை மோசமாக இருப்பதாகவும்,
இலங்கைக்கு பக்கத்து நாடு என்கிற அடிப்படையிலும் ,தமிழக மக்களின் நலன் கருதியும் நாம் உதவி செய்கிறோம் என தெரிவித்தார்.
இங்குள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் என கூறிய அவர், இலங்கை தமிழர்கள் கப்பல் மூலம் இந்தியா வரமுடியவில்லை எனவும், கொழும்பிலிருந்து, ஜவ்னாவிற்க்கு நிதி உதவி அளித்து ரயில் மூலம், விமான நிலையத்திற்கு வரவழைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு டீசல் ,பெட்ரோல் ,உணவு பொருட்கள்,மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளோம் எனவும், இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு ,இந்தியா மருந்து கொடுத்து வருவதாக கூறினார். இலங்கையில் 14 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனர், வருமானத்தில் 70 சதவீதம் அதிகாரிகளின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்றும் தெரிவித்தார்.
யாழ்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், சீனா இந்தியாவிற்கு உதவுவது இலங்கை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு எனவும் தெரிவித்தார். வடகிழக்கு பகுதியில் 46000 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது எனவும், மலையக பகுதி மக்களுக்காக 16000 வீடுகள் கட்டித்தந்துள்ளோம் எனவும் தெரிவித்த அவர், இலங்கை கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இலங்கை, இந்தியாவிடம் கேட்பது நியாமில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்பது தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது, மொழியை திணித்தால் நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்தார். செய்திக்காக கருத்து சொல்வபவர்களுக்கு நான் எப்படி கருத்து சொல்வது என தருமபுரி எம்.பி.செந்தில் கூறியதற்கு பதிலளித்த அவர்,பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கபட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கும்போக மாட்டார்கள் என தெரிவித்தார்.