கோவை: பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள ராசக்காபாளையம், திம்மங்குது, கஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து எடுக்கப்படும் கருங்கற்கள் லாரிகள் மூலம் அதிக அளவில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகின்றன.
இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்வதை கண்டுகொள்ளாத வட்டார போக்குவரத்து அலுவலர்கள், விதிகளை மீறி கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்வதை தடுக்காத வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்கள், ஆகியோர் குறித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முதல் தமிழ்நாடு முதலமைச்சர் வரை புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அதிக அளவு எடை கொண்ட கருங்கற்களை ஏற்றிக்கொண்டு கேரள பதிவெண் கொண்ட 2 லாரிகள் பொள்ளாச்சி நகரம் வழியே கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது.
கேரளாவுக்கு கனிமவளம் கடத்துவதாக கூறி லாரிகள் கண்ணாடி உடைப்பு பாஜக ஆவேசம் இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பா.ஜ.க. வினர் அங்கு திரண்டனர். கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டவாறு இரண்டு லாரிகளையும் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டு நீண்ட நேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இந்நிலையில் முற்றுகையில் ஈடுபட்டவர்களில் சிலர் ஆவேசமடைந்து லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து பொள்ளாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தீபசுஜிதா, ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், அனந்தநாயகி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பா.ஜ.க. வினரை சமாதானப்படுத்தி இரண்டு லாரிகளையும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
லாரிகள் கனிம வளங்களைக் கொண்டு செல்வதில் விதிமீறல்கள் உள்ளனவா என்றும், விதிமீறல் இருந்தால் அலுவலர்களிடம் புகார் கூறாமல் லாரிகளை சிறை பிடித்து, அடித்து சேதப்படுத்தியது யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள்