கோவை:மக்கள் தொகை குறித்து பீகார் சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அருவருக்கதக்க வகையில், ஆபாசமாக பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் பேசிய இப்பேச்சு, தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்களை கையில் எடுத்துள்ளன.
இந்நிலையில், கோவை பாஜக மகளிர் அணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சர்ச்சையான பேச்சை கண்டித்து இன்று (நவ.8) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிதிஷ் குமாருக்கும், அவரின் பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பெண்கள் குறித்தும், மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சைக் கண்டித்து பாஜகவினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் பாஜக மகளிர் அணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
ஒருபுறம் இந்த நாட்டில் உள்ள பெண்களின் கல்வி, உடல் நிலை, பாதுகாப்பு, பெருமை மற்றும் கண்ணியத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மேடையிலும் பெண்களை உயர்வுபடுத்தும் வேலையை செய்துவருகிறார். ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுகவினர் என யாரும் நிதிஷ் குமார் பேச்சுக்கு கருத்து தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவர்களுடைய பெண்கள் குறித்த பார்வையை இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது. இவர்களால் இந்நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய முடியும்? என்பதை இவர்களது பேச்சு காட்டுகிறது. இதை மகளிர் மத்தியில் பாஜக மகளிர் அணியினர் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும்' என பேசினார்.