கோயம்புத்தூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை சிவானந்தா காலனியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று (ஜூன் 16) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அந்த வகையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசுகையில், “கொங்கு மண்டத்தின் இன தலைவனுக்கு கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. சனாதான பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். செந்தில் பாலாஜி என்ன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என இதுவரை தெரிவிக்கவில்லை.
சம்மன் கொடுக்காமல், வழக்கு பற்றி தெரிவிக்காமல் கையெழுத்து போடுமாறு அமலாக்கத் துறையினரால் கொடுமையாக நடத்தப்பட்டுள்ளார். அதை பற்றி நீதிமன்றத்தில் நேரம் வரும்போது சொல்வோம். அவர் தாக்கப்பட்டுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி இதய வலியால் துடித்தபோது, நடிக்கிறார் என நினைத்து அதிகாரிகள் அவரை பிடித்து தூக்கி உள்ளார்கள். அப்போது தலை கான்கிரீட் சிலாப்பில் அடித்ததில் தலையில் அடிபட்டுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.
8 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது என்ன அநியாயம்? 3 அடைப்புகள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இருதய நோயாளிக்கு ஓய்வு வேண்டும். ஆனால், அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 6 மாதத்தில் வரலாம். ஒரு வருடத்தில் கூட வரலாம். தேர்தலுக்குப் பிறகு இந்த அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். மனிதநேயம் இல்லாத செயலை செய்யும் மத்திய அரசின் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். விசாரணை கமிஷன் போடுவோம்.
செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தர லஞ்சம் வாங்கியதாக எங்கும் நிரூபிக்கவில்லை. ஊழல் வழக்கிற்கும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்கும் சம்பந்தம் இல்லை. அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட புகாருக்கு, திமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து மிரட்டி பார்க்கிறார்கள். யாரை மிரட்டுகிறீர்கள்?
நெருக்கடி காலத்தில் நெருப்பாற்றில் நீந்தியவர், ஸ்டாலின். மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு என்பதை மறந்து விடக்கூடாது. யாரும் புறமுதுகிட்டு ஓடும் கோழைகள் அல்ல. அரவக்குறிச்சியில் தோற்ற ஆட்டுக்குட்டி அண்ணாமலையை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளேன். 14ஆம் தேதி அவர் வருவார்.
கவலைப்படாதீர்கள், அரவக்குறிச்சி தேர்தலில் தோற்று பின்னங்கால் தோளில்பட ஓடியவர். கொங்கு மண்டலத்தில் தேர்தல்களில் வெற்றி வாகை சூட காரணமாக இருந்தவர், செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தின் முக்கியத் தலைவராக செந்தில் பாலாஜி விளங்குகிறார். 2015ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து வருகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 11 சீட்டுக்காக அலைகிறார்கள். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி தலைமையில் 11 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆட்சிக்கு மீண்டும் ஒரு மகுடம் சூட்டுவோம். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடக்கும்” என தெரிவித்தார்.
கி.வீரமணி: இதனையடுத்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசியபோது, “திமுக மீது அபாண்டமான பழியைப் போட்டு மிரட்டி விடலாம் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்டு இருக்கும் அநீதி என தனித்து பார்க்காதீர்கள். திமுகவை அச்சுறுத்தி பார்க்கலாம் என தப்பு கணக்கு போட்டுள்ளார்கள்.
இந்த இயக்கம் எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம். நெருப்பாற்றில் நீந்தி வளர்ந்த இயக்கம். யாரும் பூச்சாண்டி காட்டிவிட முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காவி வர முடியாது. கொங்கு மண்டலத்தில் இருந்துதான் பெரியார் மண். கொங்கு மண்டலம் பெரியார்மண். இடையில் இங்கு சரிவு வந்தபோது செந்தில் பாலாஜிதான் வெற்றியைத் தேடித் தந்தார்.
செந்தில் பாலாஜியின் கைது பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. எவ்வளவு அச்சுறுத்தினாலும், அதனைத் தாங்கும் அளவிற்கு இந்த இயக்கம் பக்குவப்பட்ட இயக்கம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய மூன்றும் பாஜகவின் திரிசூலமாக உள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்ட திருப்பம் இந்தியா முழுவதற்கும் வரும்.
திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென தலைமைச் செயலகத்திற்குள் சென்றுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கிற்கு, ஊழல் என மிகப்பெரிய புரளியை கிளப்ப தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்துள்ளார்கள். விபரம் தெரியாத மக்களை குழப்ப வேண்டும் என இதனை செய்கிறார்கள்.
18 மணி நேரம் விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியை நோயாளியாக ஆக்கியுள்ளார்கள். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. 2024ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என ஜோசியக்காரர்கள் சொல்லியுள்ளார்கள். அதனால் 2023இல் தேர்தலை வைக்க நினைக்கிறார்கள்.
அமலாக்கத் துறை வங்கி அதிகாரிகளை அழைத்துச் செல்ல எந்த சட்டத்தில் அதிகாரம் உள்ளது? ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் நிரந்தரமாக வெளியே செல்வார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர முடியாது என ஆளுநர் சொல்ல எந்த சட்டத்தில் அதிகாரம் உள்ளது?
குற்றமற்றவர் என நிரூபிக்க, சட்டப்படி செந்தில் பாலாஜிக்கு பல வாய்ப்புகள் உள்ளது. அமித்ஷா மீது வழக்கு போட்டபோது, அவர் குஜராத் மாநில அமைச்சராகத்தான் இருந்தார். வழக்கு இருந்தாலும் அமைச்சராக இருக்க குஜராத் மாடலே உதாரணமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு ஆயத்தமாகி விட்டது.
எப்படியாவது அச்சுறுத்த நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணி. என்ன செய்தாலும் இந்த கூட்டணியைப் பிரிக்க முடியாது. ஒரு செந்தில் பாலாஜியை அல்ல, ஆயிரம் செந்தில் பாலாஜிகளை உருவாக்கும் ஆற்றல் திராவிட இயக்கங்களுக்கு உண்டு” என கூறினார்.
ஆ.ராசா:இதனைத் தொடர்ந்து பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “தனிமனிதரால் அநீதி இழைக்கப்பட்டால் இன்னொரு ஆட்சியை சரி செய்யலாம். நீதிமன்றம் அல்லது போராட்டம் மூலம் சரி செய்யலாம். எல்லா அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்கள், அதனை தவறாகப் பயன்படுத்தி அநீதி இழைக்கும்போது நாடு ஸ்தம்பிக்கும்.
அத்தகைய காட்டாச்சியை எதிர்க்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம் காப்பாற்றும் ஒரே தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் என மற்ற மாநிலத் தலைவர்கள் சொல்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்க சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தர வேண்டுமென கைது செய்துள்ளார்கள்.
சிறு, சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரம் தொடங்கி, பலரை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அதானி குழுமம் செய்த மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். ஆனால், மோடி மெளனம் சாதிக்கிறார். காட்டாச்சி, ஊழல் ஆட்சி, மதவெறி ஆட்சி நடத்துபவர்கள், கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என கருதுகிறார்கள்.
அடுத்த ஆண்டு கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெறும். அப்போது இந்திய பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இங்கு இருப்பார்கள். அவர்கள் கருணாநிதி வாழ்க என முழங்குவார்கள். அப்போது மோடி, அமித்ஷா இருக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.
வேல்முருகன்: இதனையடுத்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும்போது, மனிதநேயமற்ற முறையில் அவரது சகோதருக்கு சம்மன் அனுப்பி உள்ளார்கள். சர்வதிகார போக்குடன் மத்திய பாஜக அரசு நடந்து கொள்கிறது.
மத்திய அரசின் கைக்கூலியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ செயல்படுவதை கண்டிக்கிறோம். அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறிய பிறகும், 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அடக்குமுறையை ஏவி விட்டார்கள்.
மத்திய அரசு அடக்குமுறையை அவிழ்த்து விட்டபோது, அதற்கு எதிராக களம் கண்டு திமிறி எழுந்த மண், தமிழ் மண். எவ்வளவு திமிர் இருந்தால், தலைமைச் செயலகத்திற்குள் அனுமதி பெறாமல் நுழைந்து கொட்டம் அடிப்பாய்? தமிழ்நாடு மத்தியப்பிரதேசமோ, உத்தரப்பிரதேசமோ, மேற்கு வங்கமோ அல்ல., குனிந்து கும்பிட போட.
தமிழ்நாட்டிற்கு என மிகப்பெரிய பராம்பரியம், போர்க்குணம் உண்டு. தமிழ்நாட்டை மத்திய அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஒரு காலத்திலும் நடைபெறாது. முதலமைச்சர் நினைத்து இருந்தால், அமலாக்கத்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜி வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
மாநில உரிமைக்காக போராடும் தலைவர்களை அடக்க ஒடுக்க நினைக்கிறார்கள். தமிழ்நாடு உன்னை தூக்கிப் போட்டு மிதிக்கப் போகிறது. அமித்ஷா வந்தார், அண்ணாமலை சொன்னார். செந்தில் பாலாஜி கைது செய்யப்படுகிறார். அரைகுறை அண்ணாமலைக்கு போலீஸ் புத்தி இருந்தால், தமிழர்களுக்கும், திமுகவிற்கும் என ஒரு பொதுப்புத்தி இருக்கிறது.
பழைய திமுகவாக இருந்தால், அண்ணாமலை இப்படி பேச முடியுமா? டி.ஆர்.பாலு போன்றவர்கள் மிதவாதிகளாக ஆகிவிட்டார்கள். முதலமைச்சர் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பூட்டு போட்டுள்ளார். ஸ்டாலினுக்கு களங்கம், அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென எப்போதோ நடந்ததற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
கொங்கு மண்டலம் பாஜகவின் கோட்டை என்பதை உடைத்து திமுக பக்கம் கொண்டு வந்தவர், செந்தில் பாலாஜி. அதிகாரத் திமிருடன் நடந்து கொண்டால் வாலை ஒட்ட நறுக்குவோம். இதற்கு காலம் பதிலளிக்கும். அத்துமீறி செந்தில் பாலாஜியை கைது செய்த பாஜக நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தெரிவித்தார்.
ஈஸ்வரன்: மேலும் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “நாடு இதுவரை இல்லாத வகையில் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏமர்ஜென்சியின்போது கூட இப்படி இல்லை. அறிவிக்கப்படாத ஏமர்ஜென்சி நடக்கிறது.
அனைத்துத் துறைகளையும் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததற்கு, இப்போது தலைமைச் செயலகத்தில் ஆதாரம் கிடைக்குமா? கரூரில் வருமான வரித்துறை சோதனையின்போது நடந்ததற்கும், செந்தில் பாலாஜிக்கும் சம்பந்தம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அன்புமணி என ஒவ்வொருவராக மிரட்டல் விடுகிறார்கள். செந்தில் பாலாஜியையும் மிரட்டியுள்ளார்கள். அதற்கு அடிபணிந்துவிட மாட்டோம் என செந்தில் பாலாஜி சொன்னதால்தான் இந்த வெறி, கோபம் உள்ளது. கோவையில் திமுக வெல்ல செந்தில் பாலாஜி காரணமாக இருந்ததால், அவரை முடக்க வேண்டுமென கைது செய்துள்ளார்கள்.
மற்ற மாநிலங்களைப் போல நடத்தி விடலாம் என நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமைபட்டு 2024இல் இந்த ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டுமென முடிவு எடுத்துள்ளார்கள். உங்களுக்கு சாவு மணி ஒலித்து விட்டது. அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விட்டது. நமது கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. எதற்கும் தயாராக இருக்கிறோம்” என கூறினார்.
திருமாவளவன்: இதனையடுத்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “மோடி அரசின் பாசிச போக்கை கண்டித்து இந்த பொதுக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை நள்ளிரவு வேளையில் கைது செய்துள்ளார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் செந்தில் பாலாஜி அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின்தான்.
அவருக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காகத்தான். இதன் மூலம் அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதை தடுக்க முடியும் என மோடி, அமித்ஷா கும்பல் கணக்கு போடுகிறது. அகில இந்திய அளவில் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வருகிறார். காங்கிரஸ் இல்லாத பாரதம் பாஜகவின் கனவு.
அதனால் காங்கிரஸை ஒவ்வொரு மாநிலமாக பலவீனப்படுத்தி வருகிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சிகளை உடைத்து வருகிறார்கள். வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியை மோடி, அமித்ஷா, சங்பரிவார் கும்பல் செய்து வருகிறது.
தேர்தலில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முதல் அடியை எடுத்து வைத்தவர், ஸ்டாலின். பாஜகவை வீழ்த்த அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், கொள்கை ரீதியாகவும் வீழ்த்த முயற்சித்து வருபவர், ஸ்டாலின். பாஜகவை எதிர்க்கும், விமர்சிக்கும் கட்சிகள் உண்டு. கொள்கை அளவில் ஆட்சி பீடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர், ஸ்டாலின்.
இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல்வாதி போல செயல்படுகிறார். ஆளுநர் அலுவலகமா அல்லது ஆர்எஸ்எஸ் அலுவலகமா? செந்தில் பாலாஜியின் இரண்டு துறைகளை பகிர்ந்தளித்து பரிந்துரை செய்ததை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். இது ஆளுநர் செயல் அல்ல. ஆர்எஸ்எஸ் தொண்டரின் செயல்.
அரசாணை வெளியிட முதலமைச்சர் தயாராகி விட்டார் என்பதால், இரண்டாவது முறையாக அனுப்பியபோது பகிர்ந்து அளித்ததை ஏற்றுக் கொள்கிறார். அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரையும் பிடித்து போட்டாலும் கலங்கக் கூடியவர் ஸ்டாலின் அல்ல. திராவிட அரசியலை அழிக்க நினைக்கிறார்கள்.
அவரை வீழ்த்த வேண்டுமென உற்ற துணையாக இருந்த செந்தில் பாலாஜியை குறி வைத்து இருக்கிறார்கள். பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு வீழ்த்திக் காட்டியவர், செந்தில் பாலாஜி. அவரை முடக்குவதன் மூலம் ஸ்டாலினுக்கு நடுக்கம், தடுமாற்றத்தை தந்து விடலாம் என நினைக்கிறார்கள்.
எதிர்கட்சிகளை ஒரணியில் திரட்டி முதலமைச்சர் வழி நடத்தி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கூட்டணியை அமைக்க முடியவில்லை. கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறார். இது அவர்கள் அடி வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. முதலமைச்சருக்கு வைக்கப்பட்டுள்ள செக். முதலமைச்சரை தலை குனிய வைக்க வேண்டும், தடுமாற வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக இருக்கிறது. இலக்கை நோக்கியதாக இருக்கிறது. சனாதான சக்திகளின் குரல்வளையை நெறிக்கும் வகையில் இருக்கிறது.
துணிந்து முன்னேறுங்கள். நாங்கள் உற்ற துணையாக இருப்போம். சங்கிகளை விரட்டியடிக்க காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் ஸ்டாலின் மீது நம்பிக்கை உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஸ்டாலினுக்கு விசிக உற்ற துணையாக இருப்போம்” என தெரிவித்தார்.
முத்தரசன்: இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “சங் பரிவார்களுக்கு சமாதி கட்டும் வரை இந்த கூட்டணி தொடரும். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 0.05 சதவீத வழக்குகளில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்புகள். மோடி உருவாக்கிய அமைப்புகள் அல்ல. அவை சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்புகள். அப்படித்தான் கடந்த காலத்தில் செயல்பட்டு கொண்டு இருந்தது. மோடியை ஹிட்லர் என கூப்பிடுங்கள். அமித்ஷாவை முசோலினி அல்லது கோயபல்ஸ் என கூப்பிடுங்கள்.
அவற்றை அடிமை அமைப்புகளாக மாற்றி விட்டார். மோடி, அமித்ஷா ஏவுகிறார்கள். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் அம்புகளாக பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். மோடி, அமித்ஷா பாசிஸ்டாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். யார் அமைச்சராக இருக்க வேண்டுமென முடிவு செய்வது முதலமைச்சர்.
அவர் அமைச்சரவை பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்து அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் வழங்கியது? ஆளுநருக்கான அனைத்து செலவுகளை மாநில அரசுகள்தான் செய்கிறது. ஆளுநர் மாளிகைக்கு அவ்வளவு பெரிய நிலம் தேவையில்லை. அந்த நிலத்தை ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளியுங்கள். தமிழ்நாடு அரசிற்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்திக் கொண்டிருக்கிறார். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்” என கூறினார்.
வைகோ: தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, “பாஜக, அமலாக்கத் துறையை தவறாகப் பயன்படுத்துகிறது. மராட்டியம், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் நடந்ததுபோல, செந்தில் பாலாஜி விஷயத்திலும் நடந்துள்ளது. முதலமைச்சர் அமைச்சரவை பொறுப்புகளை பகிர்ந்து அளித்த கடிதத்தை ஆளுநர் ஏற்க மறுத்தார்.
ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதலமைச்சர். உங்களை யார் தேர்ந்தெடுத்தது? டெல்லியில் பிச்சை பாத்திரத்தில் போடப்பட்டதை எடுத்து வந்து ஆளுநராக அமர்ந்து இருக்கிறீர்கள். இந்தியைத் திணிக்க நினைத்தால் ஒருகாலும் நடக்காது. தமிழை கொச்சைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
முதலமைச்சரை கிள்ளுக் கீரையாக நினைத்து சாவல் விடுகிறீர்கள். இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் சக்தி தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பது 1965இல் நிரூபிக்கப்பட்டுள்ளது. மதிமுக இந்த ஆட்சிக்கு காவல் அரணாக இருக்கும். ஆளுநர் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். உளறு வாயான் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். எந்த அமைச்சரையும் யாரும் தொட்டு விட முடியாது. திமுகவுடன் மோத முயற்சித்தால் மண்ணை கவ்வுவீர்கள்” என தெரிவித்தார்.
கே.பாலகிருஷ்ணன்: மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “மோடி தமிழ்நாட்டில் கை வைத்தால், தேன் கூட்டில் கைவைத்த கதையாகத்தான் ஆகும். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என முதலமைச்சர் சொன்னது போல மட்டுமல்ல.
நாங்கள் திமிறி எழுந்து பெருமூச்சு விட்டாலே, நீங்கள் தாங்க மாட்டீர்கள். அமலாக்கத்துறை மிரட்டலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது புகார் இருந்தால் விசாரிக்கக் கூடாது என்பது அல்ல எங்கள் வாதம். விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக செந்தில் பாலாஜி சொன்னார்.
சோதனையின்போது தலைமறைவாக சென்று விட்டாரா? வழக்கு வந்தால் சந்திக்கத் தயார் என தைரியமாகத்தான் இருந்தார். செந்தில் பாலாஜியை அறையில் பூட்டி வைத்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதிமுக ஆட்சியில் கொடுத்த புகாருக்கு, இப்போது எதற்கு சோதனை நடத்த வேண்டும்? அதற்கு என்ன நோக்கம்?
தலைமைச் செயலகத்தில் எந்த தகவலும் சொல்லாமல் உள்ளே செல்ல அதிகாரம் உள்ளதா? துணை ராணுவப் படையை வைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்திற்குள் சோதனை செய்தபோது, முதலமைச்சர் காவல் துறையை முடக்கி விட்டு இருந்தால் உங்கள் நிலை என்ன? அதிமுக பரிதாபத்திற்குரிய கட்சி.
பல முறை ஆட்சியில் இருந்த உங்களுக்கு ஆளுநர் அதிகாரம் என்ன என தெரியாதா? செந்தில் பாலாஜியை நீக்க மனு அளிப்பது கேவலமாக இல்லையா? ஆளுநர் நினைத்தால் ஒருவரை அமைச்சராக நியமித்து விட முடியுமா? அதிமுக, பாஜகவின் தொங்கு சதையாக மாறி விட்டது. அமைச்சராக பதவி ஏற்க ஆளுநரிடம் யாரும் ஒப்புதல் கேட்கவில்லை.
ஆளுநர் ஒப்புதல் தர வேண்டிய அவசியமும் இல்லை. அமைச்சர்களுக்கு பொறுப்புகளை ஒதுக்குவது முதலமைச்சரின் பொறுப்பு. அரிச்சுவடி தெரியாத அரைவேக்காடு ஆளுநராக இருக்கிறார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பாஜகவின் கிளை அமைப்பாக மாறிவிட்டது. டெல்லியைப் போல தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது. அண்ணாமலை, பாஜகவிற்கு ஆலோசனை சொல்லுங்கள். மக்களுக்கு ஆலோசனை சொல்லாதீர்கள். முதலமைச்சர் மிரட்டும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளா?” என கூறினார்.
இதையும் படிங்க:'மதச்சார்பற்ற அணிகள் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை ஸ்டாலின் வளர்த்து வருகிறார்' - நாராயணசாமி