பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி கோவை:கோவை உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் இருக்கும் ஒக்கலிகர் பள்ளியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை இன்று(ஜூன் 29) நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பூமி பூஜையைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திருமண விழா ஒன்றில் வாழ்த்துகளை மீறி கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, சாபம் கொடுப்பதுதான் திராவிட மாடலா? - இது அநாகரிகம்.
குடும்ப ஆட்சி குறித்து பிரதமர் மோடி பேசியது 100 சதவீதம் உண்மை, அவர் பொய் பேசவில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா? - மகன் என்பதால் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறார். திமுகவில் உள்ள சாதாரண தொண்டன் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக முடியும் என்று அவரால் கூற முடியுமா? - பாஜகவை குறை கூற முதலமைச்சருக்கு அருகதை இல்லை.
சட்டம் என்பது நாட்டில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மதத்திற்கு ஒரு சட்டம் இருப்பதால் பாதிக்கப்படுவது பெண்கள். பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. முத்தாலக் தடைச் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதியைக் கொடுத்தது. அதுபோல பொது சிவில் சட்டம் அனைவருக்குமான சட்டமாக இருக்கும்.
அது பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வழி செய்யும். பொது சிவில் சட்டம் மதக் கலவரத்தை உருவாக்கும் என கற்பனையான விஷயத்தை முதலமைச்சர் சொல்கிறார். சுயநல அரசியலுக்காக பொது சிவில் சட்டத்தை எதிர்க்கக்கூடாது. பிரதமர் மோடி எல்லா மதத்தையும் சமமாகப் பார்க்கிறார். அவரைப் பற்றி பேச முதலமைச்சருக்கு அருகதை இல்லை. திமுகவிற்கு வாக்களிப்பது என்பது, குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பது, ஊழலுக்கு வாக்களிப்பது.
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்னையை தமிழக அரசு கெளரவப் பிரச்னையாகப் பார்க்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலைக் கைப்பற்ற அறநிலையத்துறை திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. திமுகவினரின் இந்து மத எதிர்ப்பு நாடறிந்தது. சிதம்பரம் கோயில் பிரச்னையில் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: லண்டனில் செந்தில் பாலாஜி தம்பியுடன் சந்திப்பா? - செய்தியாளரிடம் சீறிய அண்ணாமலை