கோயம்புத்தூர்:சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் நேற்று இரவு 11.05 மணியளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. தானியங்கி கதவு, எல்இடி திரைகள், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி என பல்வேறு நவீன அம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயிலின் முதல் சேவையில் பயணித்த பயணிகள் மகிழ்ச்சியாக கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வந்தே பாரத் ரயிலின் முதல் பயணத்தில் சென்னையில் இருந்து கோவை வந்தடைந்தார். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாஜக சார்பில் வந்தே பாரத் ரயிலுக்கும் வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த வானதி சீனிவாசன் "தமிழகத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பாரத பிரதமர் அவர்கள் துவக்கி வைத்திருப்பது சிறப்பான ஒன்றாகும். வந்தே பாரத் ரயில் சேவையின் மூலம் முக்கியமான நகரங்கள் குறைந்த நேரத்தில் இணைக்கப்படுகிறது. ஒரு விமானத்தில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றாலும் எந்தவிதமான அதிர்வுமின்றி பயணிக்க முடிகிறது.
அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் குறித்த தகவல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதி, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக வந்தே பாரத் ரயில் உள்ளது. வந்தே பாரத் ரயில் திட்டத்திற்காக பாரத பிரதமருக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். பாரதப் பிரதமர் வலியுறுத்தும் ஆத்ம நிர்பர் திட்டத்திற்கு சான்றாக இந்த ரயில் முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கொங்கு மண்டலத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை மிகப்பெரிய பயன் அளிக்கும். தொழில், கல்வி உட்பட பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு நகரங்களோடு இணைக்கப்படுவதால் மேற்கு தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரயில் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஐசிஎப்-ல் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இந்தியா முழுவதும் செல்வது தமிழகத்திற்கு பெருமையாகும்.
தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை கோவைக்கு கொடுத்ததற்காக கோவை மக்கள் சார்பாக பாரத பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு முறை பாரத பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அள்ளித் தருகிறார். டெல்லியில் இருந்து கை நிறைய திட்டங்களோடு தமிழகத்திற்கு வரும் பாரதப் பிரதமரை தமிழகம் அன்போடு வரவேற்கிறது. வரும் காலங்களில் அதிகமாக பிரதமர் தமிழகத்திற்கு வருவார் என எதிர்பார்க்கிறோம். வைஃபை, குளிரூட்டப்பட்ட வசதி போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இருப்பதால் இதன் விலை அதிகமாக தெரியலாம். தற்போது 8 பெட்டிகளோடு இயங்கி வருகிறது. வரும் காலங்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநில அரசு இதனை முழுமையாக வரவேற்க வேண்டும். இதுபோன்று மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயிலை மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை.. மனமிறங்குமா மத்திய அரசு?