கோயம்புத்தூர்: கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நடத்திய ஆய்வில் வளர்ந்த நாடுகளைப் போல பெண்களின் பாலினம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளைப் பற்றிய பார்வை மாறியிருப்பது இந்த அறிக்கை வாயிலாகத் தெரிகிறது. பெண்களுக்கான பொது சுகாதாரம் 48.5 விழுக்காட்டிலிருந்து 70.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பெண்கள் வீட்டிற்காகப் பயன்படும் எரிபொருள் 43 விழுக்காட்டிலிருந்து, 58.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
பெண்கள் சுகாதாரமான மாதாந்திரத்தைக் கடைப்பிடிப்பது 57.6 விழுக்காட்டிலிருந்து 77.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பெண்களின் வங்கி நடவடிக்கைகள் - வங்கியைக் கையாளும் திறன் 53 விழுக்காட்டிலிருந்து 78.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சுகாதார பாதுகாப்பு அமைப்பு முறைகள் 28.7 விழுக்காட்டிலிருந்து 41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்திய பெண்களின் விழுக்காடு நல்ல முறையில் உயர்ந்துவருகிறது. மகளிர் அணித் தலைவியாக இதை வரவேற்கிறேன்.