கோயம்புத்தூர்:கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாஜக விவசாய அணியின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பாஜக விவசாய அணியின் மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் பேசினார்.
அதில், “அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அன்னூர் விவசாயிகளின் போராட்டத்தை தமிழ்நாடு அரசு செவி சாய்க்க மறுத்தால் பாஜக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்.
அன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டு 115 குளங்கள் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு அன்னூர் தயாராகும் வேளையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” எனக் குற்றம்சாட்டினார்.