கோயம்புத்தூர்:விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் அட்டூழியம் செய்வதாகவும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த துப்பாக்கியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்குமாறு கோரி விவசாயிகள் பலமுறை கோரிக்கை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை தமிழக அரசிற்கு தெரிவுப்படுத்தும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பாஜக விவசாயிகள் அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பாஜக வினர் கலந்து கொண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் கள் நல்லசாமியும் கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், கேரளாவில் துப்பாக்கியால் கட்டுப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் பொழுது தமிழகத்திலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு மாத காலத்தில் இதற்கான தீர்வு அளிக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளோம்.