கோயம்புத்தூர் : சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 44 வது ஆண்டு பள்ளிகளுக்கான நடன போட்டி கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பெங்க்லென் பப்ளிக் பள்ளி (Benglen Public School) வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் ஜாக்சன் விழாவில் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஃப்ராங்க் டேவிட், முதல்வர் மார்கரேட் தேவ கிருபை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நடன போட்டியில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடனங்கள் அரங்கேறின. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆடிய நடனத்தில் இறுதியாக பாரதமாதா வெகுண்டெழுந்து குற்றவாளிகளை தண்டிப்பது போன்று தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற அமிர் மற்றும் பாவ்னி கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அமீர், தான் தற்போது இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக பாவ்னி நடித்து வருவதாக தெரிவித்தார்.