கோவை கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு என்கிற சீனிவாசன். பாரத் சேனா அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
இவர் நேற்று அந்த பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து தனது காரை வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். இதையடுத்து நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சீனிவாசனின் கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்தனர்.
சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியில் வந்த சீனிவாசன் கார் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுதொடர்பாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
பாரத் சேனா நிர்வாகியின் காருக்கு தீவைப்பு இதையடுத்து கார் எரிந்தது தொடர்பாக சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் காருக்கு தீவைத்து விட்டு தப்பி செல்வது பதிவாகி இருந்தது.
கேமராவில் பதிவான உருவத்தை வைத்து பைக்கில் வந்த நபர் யார், எதற்காக காருக்கு தீ வைத்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் பாரத் சேனா அமைப்பு நிர்வாகியின் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.