கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம், தங்கள் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் கமலவள்ளி, மோகன்ராஜ் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு பின் சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணை செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் 50,000க்கும் அதிகமான முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.900 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கமலவள்ளி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:நடிகை மாயாவின் மகன் மரணம் முதல் ஏர்போர்ட் பயணிகள் பதற்றம் வரை சென்னை குற்றச் செய்திகள்!
இந்நிலையில், பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி உள்ளிட்ட சிலரிடம் பணம் பறித்ததாக தனியாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக முன்னாள் மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பிரமோத்குமார், முன்னாள் டி.எஸ்.பி ராஜேந்திரன், காவலர் மோகன்ராஜ், இடைத்தரகர்கள் பிரபாகரன், செந்தில் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு கோவை மாவட்ட இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.