பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில், பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவர்கள், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், கைதான நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனிடையே
பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கட்சியின் தலைமை நீக்கியது.
இதனிடையே பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவில் பார் நாகராஜ் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து நாகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கும், இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியிருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.