நீதிமன்ற உத்தரவின்படி பழனி கோயிலில் மீண்டும் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை விதிகளின் படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.
இந்த சட்டமானது இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் நீண்ட ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் சார்பில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு இருந்தது.
கோயில் கும்பாபிஷேக பணிகளுக்காக அறிவிப்பு பதாகை அகற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் இஸ்லாமிய குடும்பத்தினர் மின் இழுவை ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையை அணிந்து இருந்ததால், மாற்று மதத்தினர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறி அதிகாரிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் டிக்கெட்டை திரும்ப கேட்டு உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சர்ச்சையானது. இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கோயில் நிர்வாகம் அந்தப் பெயர் பலகையை அகற்றியது. பெயர் பலகை அகற்றியதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வின்ச் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பெயர் பலகை அகற்றப்பட்டது சம்பந்தமான வழக்கு ஒன்றைத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்து சமய அறநிலையத் துறையின் விதியின் கீழ் வைக்கப்பட்ட பெயர் பலகை ஏன் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கு 28 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மலை அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் மீண்டும் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளதால் பழனி மலை அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:இசை வித்வான் ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி.. கேதார் கருவி மூலம் சிறப்பு இசைக் கச்சேரி!