கோயம்புத்தூர்: மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையம் வனச்சரகம் அமைந்துள்ளது. இது கேரளாவில் இருந்து நீலகிரிக்கு யானைகள் வலசை செல்லும் முக்கிய யானை வழித்தடமாக மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதி உள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனச்சரகம் அருகே பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதி உள்ளதால் சிறுமுகை வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.
அதுமட்டுமின்றி கோடை காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் காணப்படும். இந்த நிலையில் இவ்வாறு சிறுமுகை வனப்பகுதிக்கு வந்த ஆண் காட்டு யானை ஒன்று சிறுமுகை வனப்பகுதியிலேயே தங்கிவிட்டது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு அடிக்கடி வந்து சென்றும் இருந்தது. யானையின் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு நீண்ட தந்தம் இவற்றை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த ஆண் காட்டு யானைக்கு பாகுபலி என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
மேலும், அந்த யானை விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தியதால் இட மாற்றம் செய்ய வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொறுத்தி கண்காணிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அத்திட்டம் தோல்வி அடைந்ததால் அதனை கைவிட்டனர்.
ஆனால், தொடர்ந்து பாகுபலி யானையானது மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும்போது பத்திரகாளியம்மன் கோயில் சாலை சமயபுரம் பகுதி வழியாக கடந்து செல்வது வழக்கம். ஆகையால் அதனை நாள்தோறும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.