தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேயாவை பாதுகாத்து வையுங்கள் - அவர் பேரன்பின் அடையாளம் - நேயா கோயம்புத்தூர்

என்றைக்கு வேறு இனத்தை சேர்ந்த ஒரு உயிரின் மீது சிறுமி நேயாவுக்கு ஈரம் சுரந்ததோ அன்றே அவள், அவர் என்ற மரியாதை ஸ்தானத்திற்கு உயர்ந்துவிட்டார்.

dfas
ட்ஃபச்

By

Published : Mar 18, 2021, 5:37 PM IST

Updated : Mar 18, 2021, 5:53 PM IST

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, என்ற திருக்குறள் ஒன்று உண்டு. பிறப்பினால் அனைவரும் சமம் என்பதன் பொருள்தான் அது. அனைவரும் என்றால் இங்கு மனிதர்கள் மட்டுமில்லை இந்தப் பூமியில் பிறந்திருக்கும் அத்தனை உயிர்களும்தான். ஆனால், நாம்தான் இங்கு அனைத்துக்கும் மூலம் என்று நினைத்துக்கொண்டு மனிதர்கள் சுற்றுகிறார்கள்.

காடும், கடலும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் யானை. மனிதர்கள் இயற்கையின் சங்கிலித்தொடரை புரிந்துகொள்ளாமல் காட்டுயிர்களைக் கொல்கிறார்கள்.

யானைகளால் மனிதர்களுக்கு என்ன பயன் என்று தற்போது யோசிக்கலாம். அது நீண்டது. அதை சுருக்கிச் சொல்வதென்றால், மனித இனம் இயங்கியது முதலில் தாய் வழி சமூகத்தில். அதுபோல் யானைகள் எப்போதும் தாய் வழிச் சமூகத்தில்தான் இயங்குகின்றன.

இரண்டு உயிர்களும் சமநிலையில்தான் இருக்கின்றன. இரண்டு உயிரினங்களும் சமநிலை தவறி குறைந்தாலோ, கூடினாலோ அதில் ஒரு உயிரினம் தவறு செய்கிறது என்று அர்த்தம். அதை, மனித இனம் செய்துகொண்டிருக்கிறது.

தாய்லாந்தில் அடையாளம் கண்டுகொண்ட யானை

ஆனால், சமீபத்தில்கூட தாய்லாந்தில், 12 வருடங்களுக்கு முன் தனக்கு மருத்துவம் அளித்த மனிதனை அடையாளம் கண்டுகொண்ட ஒரு யானை அவருடன் நெருங்கிப் பழகியது.

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் அதாவது 2015ஆம் ஆண்டு 61 யானைகள், 2016ஆம் ஆண்டு 98 யானைகள், 2017ஆம் ஆண்டு 125 யானைகள், 2018ஆம் ஆண்டு 84, 2019ஆம் ஆண்டு 108, 2020ஆம் ஆண்டு செப்டம்பர்வரை 85 என மொத்தம் 561 யானைகள் அகாலத்தில் உயிரிழந்திருக்கின்றன.

சமீபத்தில், யானைக்கு பழத்தில் குண்டு வைத்து கொன்ற கேரளாவை அடுத்து தமிழ்நாட்டில் யானைகளின் தொடர் மரணங்கள் பேசுபொருளாகி இருக்கிறது. அதை சிறுமி நேயா அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறாள்.

கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உயிரிழந்த யானைகள்

கோயம்புத்தூர் மாவட்டம் பொத்தானூரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். அவருக்கு நேயா என்றொரு மகள். நிற்க கொஞ்சம் முன்னதாக,

பேருயிர் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக தண்டவாளத்தை கடக்கிறது. அசுர வேகத்தில் வந்த இரும்பு பாம்பு (எக்ஸ்பிரஸ் ரயில்) அந்த யானையை அடித்து தூக்கிவீசிவிட்டு அதே வேகத்தில் அடுத்த வேட்டைக்கு போய்க்கொண்டிருந்தது.

மழை வரக் காரணமான மரங்கள் பெருக தனது எச்சத்தை விதையாக மாற்றும் யானை பசியோடு, தண்ணீர் தாகத்தோடு பிளிறிக்கொண்டிருக்கிறது.


இந்த அவலக் காட்சி அடங்கிய வீடியோவைப் பார்த்த நேயா, கண்ணீரோடு,இத பார்க்க பார்க்க எனக்கு அழுகையா வருது ப்ரெண்ட்ஸ், யானைய யாரும் இப்டி பண்ணக்கூடாதுனு சொல்லுங்க ப்ரெண்ட்ஸ் என்று தேம்பி தேம்பி அழுகிறாள். இல்லை, அழுகிறார்.

என்றைக்கு வேறு இனத்தை சேர்ந்த ஒரு உயிரின் மீது சிறுமி நேயாவுக்கு ஈரம் சுரந்ததோ அன்றே அவள், அவர் என்ற மரியாதை ஸ்தானத்திற்கு உயர்ந்துவிட்டார்.

நேயாவைப் பொறுத்தவரை அவருக்கு இன வேற்றுமை தெரியவில்லை, கண்ணீரை அவர் ஒரு தரப்புக்காக சிந்தவில்லை, அனைத்து உயிர்களும் இங்கு சமம் என்பதையும், அனைத்திற்குமானது இந்த பூமி என்பதையும் அவர் நமக்கு உணர்த்துகிறார்.

சுற்றுச்சூழலா, காடின், காட்டுயிர்களின் முக்கியத்துவமா அப்படி என்றால் என்னவென கேட்பவர்கள் மத்தியில் தந்தையோடு சேர்ந்து இந்த வயதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செய்கிறார்.

எதிர்வரும் காலங்களில் சக உயிர்கள் மீது எவ்வளவு பேரன்பு இருக்கும் என்பதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாதது. சகிப்புத்தன்மை முற்றிலுமாக இல்லாமல் போய் மனிதர்களோடு தங்களுக்குள் மோதிக்கொள்வது பத்தாது என்று, அனைத்தையும் அனுபவிக்கும் பேராசையால் காட்டு விலங்குகளுடனும் மோதிக்கொண்டிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சமூகத்தில் நேயா போன்றோர்கள் ஈரத்தின், பேரன்பின் அடையாளம். பூமியில் வாழ முடியாத சூழல் உருவானால் செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, சிலர் செவ்வாயில் இடமும் வாங்க முயல்கின்றனர். மனிதர்கள் வாழ இனி எங்கு இடம் தேடினாலும் அங்கு நேயாக்களுக்கு ஒரு இடம் பார்த்துவைக்க வேண்டும். ஏனெனில், பேரன்பு இருந்தால்தான் எந்த கிரகமும் உயிர்ப்போடு இருக்கும்.

மனிதர்களுக்கு சிந்திக்கும் திறனை இயற்கை கொடுத்ததே அடுத்த உயிருக்காக சிந்திக்கத்தானேயொழிய அடுத்த உயிர்களை ஒழித்துக்கட்ட அல்ல. மனிதன் எப்படி இருக்க வேண்டுமென்று இயற்கை வகுத்து வைத்திருக்கிறதோ அப்படி இருக்கிறார் நேயா.

எண்ணிக்கையில் குறைந்த இதுபோன்றவர்கள் உலகம் முழுக்க இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த நேயாக்களை பாதுகாத்து வையுங்கள். அவர்கள் பேரன்பின் அடையாளம்.

இதையும் படிங்க: கானக உயிர்களைக் காண ஒரு பயணம்.... வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்

Last Updated : Mar 18, 2021, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details