கோவை மசக்காளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த், விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை (கிஷாந்த்) ஒன்று உள்ளது. அக்குழந்தைக்கு சளி பிடித்திருந்ததால் நேற்று (பிப். 17) விஜயலட்சுமி அக்குழந்தை மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் குழந்தைக்கு ஊசிபோட்டு அனுப்பியுள்ளார்.
மேலும் குழந்தைக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மருந்து அளிக்கும்படி ஒரு சிரப்பையும் கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு வந்து விஜயலட்சுமி குழந்தைக்கு நான்கு சொட்டு சிரப்பை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கழித்து புறநிலை மூச்சுத்திணறலால் குழந்தை அவதிப்பட்டுள்ளது.
உடனடியாக உப்பிலியப்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.
தங்கள் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து விஜயலட்சுமி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குழந்தைக்கு ஊசி போட்டதால் இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சிங்காநல்லூர் காவல் நிலையம் இதனிடையே, அங்கன்வாடி நிலையத்தில் ஊசி போட்டுக்கொண்ட குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.