கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கோவை செல்வபுரம் பகுதியில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழி தர்ம யுக பேரவைத் தலைவர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மிகவும் கொச்சையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் செல்வபுரம் காவல் துறையினர் பொது இடங்களில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அய்யா வழி தர்ம யுக பேரவைத் தலைவர் பாலமுருகன் மன்னிப்புக் கேட்ட காணொலி இந்நிலையில் அவ்வாறு அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு அவரே காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், பொது இடத்தில் வைத்து இந்து இயக்கத் தலைவர்களையும் காவல் துறையினரையும் அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இனிமேல் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சீமானுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கும் விஜயலட்சுமி!