கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து கோயம்புத்தூர்: தடாகம் சாலை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 34). இவரது நண்பர்கள் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 45), கருப்பசாமி (வயது 51), அய்யனார் (வயது 45), சக்திவேல் (வயது 39). இவர்கள் நான்கு பேரும் தினேஷ்குமார் வீட்டில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர், வெளியில் சென்று மது அருந்தலாம் எனக் கூறி ஏழுமலையின் ஆட்டோவில் வீரபாண்டியை அடுத்த மருதங்கரை என்ற மலைவாழ் கிராமப் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோவை ஏழுமலை ஓட்டி வந்த நிலையில் மூலக்காடு எனும் பகுதியில் சென்று கொண்டு இருந்த ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், சம்பவ இடத்திலேயே ஏழுமலை (ஆட்டோ ஓட்டுநர்) மற்றும் கருப்புசாமி (கேபிள் ஆப்ரேட்டர்) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் போலீசார், பெரியநாயக்கன் பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன், ஆகியோர் ஊர் பொது மக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நிறைவு.. சென்னை விமான நிலையம் வெறிச்சோடல்.. பயணிகள் இல்லாததால் விமான சேவைகள் ரத்து!