தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடிய வேனில் கடத்தப்பட்ட ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன்

கோவையில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாயமானதை அடுத்து, 6 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்திய வேனில் கடத்தப்பட்ட ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன்
கடத்திய வேனில் கடத்தப்பட்ட ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன்

By

Published : May 25, 2023, 2:02 PM IST

கோயம்புத்தூர்:சென்னை ஐயப்பாக்கம் ராஜம்மாள் நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் யுவன் கதிரவன் (13). இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கோடை விடுமுறை காரணமாக மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோயம்புத்தூர் மாவட்டம் மசக்காளிபாளையத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (மே 24) கதிரவன் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் கதிரவன் வீடு திரும்பவில்லை. மகன் காணாமல் போனதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்தப் பகுதி முழுவதும் நீண்ட நேரமாக தேடி உள்ளனர்.

ஆனால், சிறுவன் கிடைக்காததை அடுத்து, சிறுவனின் பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் ஒண்டிப்புதூர் பேருந்து நிலையம் வழியாக சென்ற லோடு வேன் ஒன்றில் சிறுவன் ஏறிச் சென்றது தெரிய வந்துள்ளது. பின்னர், அந்த லோடு வேனின் பதிவு எண்ணைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வேன் வேடப்பட்டியில் உள்ள தனியார் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் லோடு வேனின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினரின் தொடர் விசாரணையில், கடத்தப்பட்ட லோடு வேனில், வழியில் சிறுவனை ஏற்றிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிறுவனைக் கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சிறுமி ஒருவர் காணாமல் போனார்.

பின்னர் 5 தனிப்படைகள் அமைப்பட்டு, குறுகிய காலத்தில் அந்த சிறுமி பொள்ளாச்சியில் மீட்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறுவன், அதுவும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாயமாகி உள்ளதும், அவரை கடத்த வேனில் ஏற்றிச் சென்றுள்ளதும் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமல்லாமல், கோவையில் தொடரும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மருத்துவமனையில் இருந்து காமுகன் தப்பியோட்டம்.. சென்னையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details