கோயம்புத்தூர்கார் வெடிப்பு வழக்குத்தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட பெரோஷ், நிவாஸ் ஆகியோரின் தாயார் மைமுனாபேகம், தனது மகன்கள் குற்றவாளிகள் அல்ல என ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், பெரோஷ், நிவாஸ் ஆகியோரின் நண்பன் முபின் தனது வீட்டை காலி செய்யப்போவதாகவும் பொருள்களை எடுக்க ஆள்கள் வேண்டும் எனக்கேட்டதாலே தனது மகன்களை அங்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ ஒன்றையும் அவர் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ளார். அதில், பெரோஷ் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் இடையிலான செல்போன் உரையாடலும், ரியாஸ் மற்றும் அவரது தாயார் இடையிலான செல்போன் உரையாடலும் வெளியிட்டுள்ளார்.
பெரோஸ் தனது நண்பர் ரியாஸ் உடன் பேசும் ஆடியோவில், பெரோஷ், ரியாஸை தொடர்புகொண்டு முபின் வீடு காலி செய்வதாகவும்; பொருள்களை எடுக்க ஆள் வேண்டும் எனவும் கூறி ரியாஸை அழைக்கிறார். அதற்கு ரியாஸ் வர மறுக்கவே, 'ஒரு நிமிடம் வந்துட்டுப் போ’ என பெரோஸ் கூறுகிறார்.
மற்றொரு ஆடியோவில் ரியாஸின் தாயார் ஜூனைதா பேகம் அழைக்கும்போது, முபின் வீட்டில் வீடு காலி செய்துகொண்டு இருப்பதாகவும், விரைவில் வீட்டிற்கு வந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றார்.
இதன் மூலம், ஜமேசா முபின் வீட்டிற்கு பெரொஷ், நவாஸ், ரியாஸ் ஆகிய மூவரும் வீட்டை காலி செய்து கொடுக்கவே சென்றனர் என அவர்களது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.