ஐதராபாத் : 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. நடப்பு சீசனில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
நடப்பு ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தடகளம் பிரிவில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலமும், 4X400 மகளிர் தொடர் ஓட்டம் மற்றும் 4X400 மீட்டர் கலப்பு பிரிவு தொடர் ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளி பதக்கமும் வென்றார். நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் அதிக பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனை என்ற சாதனைக்கும் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் சொந்தக்காரர் ஆனார்.
ஆசிய விளையாட்டை மட்டும் தனது இலக்காக நிர்ணயிக்காமல் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வெல்வதையே தனது கனவாக கொண்டு இருக்கும் வித்யா ராம்ராஜ், தனது சகோதரி நித்யா ராம்ராஜூடன் ஈ.டிவி பாரத்திற்கு பிரத்யே பேட்டி அளித்தார். அப்போது, "ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேவையான தனது அடுத்தடுத்த இலக்கு மற்றும் முயற்சிகள் குறித்து வித்யா ராம்ராஜ் கூறுகையில், "வரும் 26ஆம் தேதியில் கோவாவில் தேசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. அந்த விளையாட்டு தொடரில் பங்கேற்க உள்ளோம். அந்த தொடரில் இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டு குறுகிய நேரத்தில் எங்களது இலக்கை அடைய முயற்சிப்போம்.
கடந்த கரோனா காலக்கட்டத்தில் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு நித்யா விளையாட்டை விட்டு விக்கிக் கொண்டார். மீண்டும் தடகள போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் நித்யா இருந்தார். ஆனால் எங்களது பயிற்சியாளர் தான் அவளுக்கு ஊக்கம் அளித்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்க வைத்தார்.
உலக தரவரிசையில் முதல் 40 இடங்களில் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவர். சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்படும் போது அதில் கிடைக்கும் புள்ளிகளை கொண்டு உலக தரவரிசையில் மதிப்பீடுகள் உயர்ந்து தரவரிசையும் உயரும். அதேநேரம், மற்றொரு வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடக்கும் பட்சத்தில் அதன் மூலமாகவும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.