கோயம்புத்தூர்: கன்னியாகுமரியைச் சேர்ந்த முத்துராஜின் மனைவி ரதி (32). இவர் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கு திலகவதி என்பவருடன் ரதிக்கு நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, திலகவதியின் அழைப்பின் பேரில், ரதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது ரதியிடம் இருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட திலகவதி, திடீரென குழந்தையுடன் மாயமானதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரிக்கப்பட்டது. மேலும், கோயிலில் இருந்த சிசிடிவியில் திலகவதி குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றது பதிவாகியிருந்தது.
அதனடிப்படையில் போலீசார் திலகவதியைத் தேடி வந்தனர். பின்னர் குழந்தையை கடத்திய திலகவதி, அவரது ஆண் நண்பர் பாண்டியனுடன் கோவை ஆலாந்துறை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் திருச்செந்தூரில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை, ஆலாந்துறை போலீசார் சேலம் மாவட்ட காவல் துறை உதவியுடன் மீட்டனர்.
பின்னர் திருச்செந்தூரில் ஓன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், நேற்று பாண்டியன் மற்றும் திலகவதியிடம் கோவை பூண்டி பகுதியில் ஆலாந்துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திலகவதி மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவரை பூலுவம்பட்டி பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க முயன்றபோது, திலகவதி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு, குற்றவியல் நீதிமன்ற நடுவர் சந்தோஷ் குமார் முன்பு பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதில், திலகவதி வெள்ளை நிறமான ஒரு விஷ மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
ஆலந்துறை காவல் நிலையத்தில் திலகவதி உயிரிழந்த நிலையில், காவல் துறையினர் தங்களை பிடித்து விட்டால், இருவருமே விஷ மருந்து சாப்பிட்டு உயிர் இழந்து விடலாம் என்று கூறியதாகவும், தற்போது நீ மட்டும் இறந்து விட்டாய் என்று கண்ணீர் மல்க பாண்டியன் அழுததாகவும் போலீசார் தரப்பில் தகவல் கூறப்படுகிறது. இதனையடுத்து நீதிபதி சம்பவம் நடந்த காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: "திருத்தணி காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை" - பொதுமக்கள் வேதனை!